< Back
தேசிய செய்திகள்
குறைந்த வட்டியில் கடன் வாங்கி தருவதாக கூறி  பெண்ணிடம் ரூ.8½ லட்சம் மோசடி
தேசிய செய்திகள்

குறைந்த வட்டியில் கடன் வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.8½ லட்சம் மோசடி

தினத்தந்தி
|
25 Aug 2023 12:15 AM IST

குறைந்த வட்டியில் கடன் வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.8½ லட்சம் மோசடி சம்பவம் நடந்துள்ளது.

மங்களூரு-

தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா பதங்கடி கிராமத்தை சேர்ந்தவர் லீனா. கடந்த 1-ந் தேதி இவரது செல்போனுக்கு அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய மர்ம நபர் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றுவதாக கூறியுள்ளார். பின்னர் எங்கள் நிதி நிறுவனத்தில் குறைந்த வட்டியில் பணம் வழங்கப்படுகிறது.

இந்த கடன் தொகையை பெறவேண்டும் என்றால் கமிஷன் தொகை முன்கூட்டியே செலுத்தவேண்டும் என்று கூறினார். இதை கேட்ட லீனாவிற்கு கடன் வாங்கும் ஆர்வம் அதிகமானது. இதையடுத்து லீனா, அந்த நபரிடம் கடன் வாங்க விரும்புவதாக கூறினார். அதாவது பல லட்சம் கடன் தேவைப்படுவதாக கூறினார்.

இதை கேட்ட மர்ம நபர் அந்த கடன் தொகைக்கு கமிஷனாக ரூ.10 லட்சம் வழங்கும்படி கூறினார். இதையடுத்து லீனா அதிகளவு பணம் கடனாக கிடைக்கும் என்ற ஆசையில், மர்ம நபர்கள் கேட்ட கமிஷன் தொகையை பல்வேறு தவணையாக அவரது வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தார். மொத்தம் ரூ.8.40 லட்சம் வரை செலுத்தியதாக கூறப்படுகிறது.

ஆனால் மர்ம நபரிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த லீனா, மர்ம நபரை செல்போனில் தொடர்பு கொண்டு பேச முயன்றபோது, அவை சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து தான் ஏமாற்றம் அடைந்ததை அறிந்த லீனா, இதுகுறித்து பெல்தங்கடி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்