தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பட்டதாரி பெண்களிடம் பண மோசடி; 3 பேர் கைது
|தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பட்டதாரி பெண்களிடம் பண மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். பெங்களூருவில், பதுங்கி இருந்தபோது பிடிபட்டனர்.
சிக்கமகளூரு;
பட்டதாரி பெண்களிடம் பண மோசடி
சிக்கமகளூரு, கடூர் உள்ளிட்ட பகுதிகளில் பட்டதாரி பெண்களை குறிவைத்து பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ஒரு கும்பல் பண மோசடி செய்து வந்துள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் போலீஸ் நிலையங்களில் புகார் அளித்து இருந்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடி கும்பலை வலைவீசி தேடிவந்தனர்.
3 பேர் கைது
இந்த நிலையில் வேலை வாங்கி தருவதாக கூறி பட்டதாரி பெண்களிடம் பண மோசடி செய்த 3 பேர், பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பெங்களூருவுக்கு விரைந்து சென்ற சக்கராயப்பட்டணா போலீசார், 3 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்து அழைத்து சென்றனர்.
விசாரணையில் அவர்கள் பெங்களூருவை சேர்ந்த குமாரசாமி(வயது 29), மண்டியா மாவட்டம் மலவள்ளியை சேர்ந்த லட்சுமேஷ்(26) மற்றும் பிரதீப்(31) ஆகியோர் என்பதும், இவர்கள் சிக்கமகளூரு, ஹாசன், மண்டியா உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பட்டதாரி பெண்களை குறிவைத்து அவர்களிடம் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை இருப்பதாக கூறி ஆவணங்களை பெற்றுள்ளனர்.
பின்னர் அவர்களிடம் பல்வேறு காரணங்களை கூறி பல லட்சம் ரூபாய் பெற்று வேலை வாங்கி தராமல் பண மோசடி செய்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.12 ஆயிரம் மற்றும் 7 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 3 பேரிடம் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.