சாவர்க்கர் ஒருபோதும் வெளிநாட்டுக்கு 6 மாத சுற்றுலா சென்றது இல்லை; ராகுல் காந்தியை சாடிய அனுராக் தாக்குர்
|வீர சாவர்க்கர் ஒருபோதும் வெளிநாட்டுக்கு 6 மாத காலத்திற்கு சுற்றுலா சென்றது இல்லை என ராகுல் காந்தியை அனுராக் தாக்குர் சாடியுள்ளார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசிய வழக்கு ஒன்றில் அவருக்கு எதிராக சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதன் எதிரொலியாக, மக்களவை செயலகம் அவரது எம்.பி. பதவியை அதிரடியாக பறித்தது.
இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து, போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றன. எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் இல்லை. நான் காந்தி என்று பேசினார்.
இந்நிலையில், வீர சாவர்க்கரின் பேரனான ரஞ்சித் சாவர்க்கர் செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, ராகுல் காந்தி கூறும்போது அவர் சாவர்க்கர் இல்லை என்றும் மன்னிப்பு கேட்கமாட்டேன் என்றும் கூறியுள்ளார்.
சாவர்க்கர் மன்னிப்பு கேட்டார் என்பதற்கான ஆவணங்களை காட்டும்படி அவருக்கு நான் சவால் விடுகிறேன். இதற்கு நேர்மாறாக, சுப்ரீம் கோர்ட்டில் 2 முறை மன்னிப்பு கேட்டவர் ராகுல் காந்தி. அரசியலில் முன்னேற வேண்டும் என்பதற்காக, தேசப்பற்றாளர்களின் பெயர்களை பயன்படுத்துவது என்பது ஏற்கத்தக்கது அல்ல என்று அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், மத்திய தகவல் ஒலிபரப்பு துறை மந்திரி அனுராக் தாக்குர் கூறும்போது, ராகுல் காந்தி ஓ.பி.சி. சமூகத்தினரை தொடர்ந்து புண்படுத்தி வருகிறார். அவர்களிடம் அதற்காக அவர் மன்னிப்பு கேட்கவும் இல்லை.
கோர்ட்டின் உத்தரவுக்கு அவர்கள் கீழ்படியவில்லை. தற்போது ஏன் அவர்கள் நாடகம் போடுகின்றனர்? அவர் ஒருபோதும் சாவர்க்கர் ஆக முடியாது. சாவர்க்கர் ஒருபோதும் வெளிநாட்டுக்கு 6 மாத சுற்றுலா சென்றது இல்லை என கூறியுள்ளார்.
ராகுல் காந்தி தனது கனவில் கூட சாவர்க்கர் ஆக முடியாது. ஏனெனில், சாவர்க்கர் ஆவதற்கு உறுதியான எண்ணம், நாட்டின் மீது நேசம், சுயநலமின்மை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை தேவை என்று அனுராக் தாக்குர் நேற்று கூறியிருந்த நிலையில், தற்போது ராகுல் காந்தியை சாடியுள்ளார்.