திகார் சிறையில் மயங்கி விழுந்தார் சத்யேந்தர் ஜெயின் - ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை
|டெல்லி முன்னாள் மந்திரி சத்யேந்தர் ஜெயின், திகார் சிறை குளியலறையில் வழுக்கி விழுந்தார். ஆஸ்பத்திரியில் அவருக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புதுடெல்லி,
டெல்லி அரசில் சுகாதாரத்துைற மந்திரியாக இருந்தவர் சத்யேந்தர் ஜெயின். கடந்த ஆண்டு மே மாதம், சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக் கத்துறையால் கைது செய்யப்பட்டார். அப்போதிருந்து டெல்லி திகார் சிறையில் விசாரணை கைதியாக இருந்து வருகிறார்.
சிறையில் அவர் 'மசாஜ்' வசதி, வீட்டு சாப்பாடு என சொகுசு வசதிகளை அனுபவித்து வருவதாக செய்திகள் வெளியாகின.
இதற்கிடையே, சில நாட்களுக்கு முன்பு, சத்யேந்தர் ஜெயின், திகார் சிறை குளியலறையில் வழுக்கி விழுந்தார். அதனால் அவருக்கு முதுகு தண்டுவடத்தில் காயம் ஏற்பட்டது. அவர் திகார் சிறை ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருந்தார்.
மயங்கி விழுந்தார்
இந்நிலையில், நேற்று காலை அங்குள்ள குளியலறையில் சத்யேந்தர் ஜெயின் தலைசுற்றல் காரணமாக மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை டாக்டர்கள் பரிசோதித்தனர். அவரது உடல் உறுப்புகள் சீராக இயங்குவது கண்டறியப்பட்டது.
இருப்பினும், முதுகு, இடது கால், தோள்பட்டை ஆகிய இடங்களில் சத்யேந்தர் ஜெயினுக்கு வேதனை இருந்தது. அதனால் அவர் டெல்லி தீனதயாள் உபாத்யாயா ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பின்னர், மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அங்கிருந்து லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். ஆக்சிஜன் கருவி பொருத்தப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அரவிந்த் கெஜ்ரிவால் அறிக்கை
இதற்கிடையே, இதுதொடர்பாக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருப்பதாவது:-
பொதுமக்களுக்கு நல்ல சிகிச்சையும், ஆரோக்கியமும் அளிக்க இரவு, பகலாக பாடுபட்டவரை தண்டிப்பதில் ஒரு சர்வாதிகாரி பிடிவாதமாக இருக்கிறார். கடவுள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் நீதி வழங்குவார்.
எதிர்மறையான சூழ்நிலைகளையும் எதிர்த்து போராடும் வலிமையை சத்யேந்தர் ஜெயினுக்கு கடவுள் அளிக்கட்டும் என்று அவர் கூறியுள்ளார்.