கார்கே, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ஆவது பெருமை; சதீஸ் ஜார்கிகோளி பேட்டி
|அகில இந்திய காங்கிரஸ் தலைவராக கார்கே ஆனால் தமக்கு பெருமை என்று சதீஷ் ஜார்கிகோளி கூறினார்.
பெலகாவி:
கர்நாடக காங்கிரஸ் செயல் தலைவர் சதீஸ் ஜார்கிகோளி பெலகாவியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி மனது வைத்தால் 2 முறை பிரதமராகி இருக்கலாம். ஆனால் மன்மோகன்சிங்கை பிரதமர் ஆக்கினார். தற்போது அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மல்லிகார்ஜுன கார்கே போட்டியிட்டுள்ளார். அவரே கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படுவார். இது எங்களுக்கும் பெருமை அளிப்பதாக உள்ளது. ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் அனைவரும் பிரதமா மோடி மற்றும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு ஆதரவாக இல்லை.
அதனால் தான் ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஒருவர் நாட்டில் நிலவும் பசி, வேலையின்மை குறித்து கவலை தெரிவித்து பேசியுள்ளார். பரேஸ் மேத்தா என்ற இளைஞரை வேறு மதத்தை சேர்ந்தவர்கள் கொலை செய்ததாக பா.ஜனதாவினர் குற்றம்சாட்டினர். இதை வைத்து அரசியல் செய்து உத்தரகன்னடா மாவட்டத்தில் பா.ஜனதாவினர் அரசியல் ஆதாயம் தேடினர். இதனால் கடந்த சட்டசபை தேர்தலில் அந்த மாவட்டத்தில் காங்கிரசுக்கு தோல்வி ஏற்பட்டது.
டி.கே.ரவி ஐ.ஏ.எஸ்., போலீஸ் அதிகாரி கணபதி ஆகியோரின் தற்கொலையிலும் பா.ஜனதாவினர் அரசியல் செய்தனர். அந்த வழக்குகளில் சி.பி.ஐ., அவர்கள் தற்கொலை செய்து கொண்டனர் என்றும், அதற்கு வேறு யாரும் காரணம் அல்ல என்றும் அறிக்கை தாக்கல் செய்தனர்.
இவ்வாறு சதீஸ் ஜார்கிகோளி கூறினார்.