இந்து குறித்து காங்கிரஸ் செயல் தலைவர் சதீஸ் ஜார்கிகோளியின் கருத்தால் சர்ச்சை
|‘இந்து’ என்ற சொல்லுக்கும், இந்தியாவுக்கும் என்ன சம்பந்தம்? என்று காங்கிரஸ் செயல் தலைவர் சதீஸ் ஜார்கிகோளி கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெலகாவி:
'இந்து' என்ற சொல்லுக்கும், இந்தியாவுக்கும் என்ன சம்பந்தம்? என்று காங்கிரஸ் செயல் தலைவர் சதீஸ் ஜார்கிகோளி கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அர்த்தம் மோசமானது
பெலகாவி மாவட்டம் நிப்பானியில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில செயல் தலைவர் சதீஸ் ஜார்கிகோளி கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:-
பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் இந்து, இந்துத்துவா என்ற கொள்கையை முன்வைத்து அரசியல் செய்து வருகிறார்கள். ஆனால் இந்து என்ற சொல் பார்சியன் மொழியை சேர்ந்தது. அந்த சொல் ஈரான், ஈராக், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வந்தது. இந்து சொல்லுக்கும், இந்தியாவுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது?.
இந்து என்ற சொல்லின் அர்த்தம் மோசமானது. அந்த சொல் எங்கிருந்து வந்தது என்பதை தெரிந்து கொள்ள இணையத்திற்கு சென்றால் தெரிந்து கொள்ளலாம். இந்து என்ற சொல் இந்தியாவுக்கு சேர்ந்தது அல்ல.
இவ்வாறு சதீஸ் ஜார்கிகோளி பேசினார்.
காங்கிரஸ் கண்டனம்
சதீஸ் ஜார்கிகோளியின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது இந்த கருத்தை பா.ஜனதா மட்டுமின்றி காங்கிரஸ் மேலிடமும் கண்டித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "இந்து என்பது நமது வாழ்க்கை. அது உண்மையும் கூட. ஒவ்வொரு மதத்தின் நம்பிக்கை அடிப்படையில் நாட்டை காங்கிரஸ் கட்டமைத்துள்ளது. இது தான் இந்தியாவின் சாராம்சம். இந்து குறித்து சதீஸ் ஜார்கிகோளி கூறிய கருத்து துரதிர்ஷ்டமானது. அவரது கருத்தை நிராகரிக்கிறேன். மேலும் அந்த கருத்தை கண்டிக்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.