புதுச்சேரி தலைமை செயலாளராக சரத் சவுகான் நியமனம்
|புதுச்சேரி தலைமை செயலாளராக சரத் சவுகான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரியில் முதல்-மந்திரி, மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் பேச்சை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கேட்பதில்லை என்று புகார் கூறப்பட்டு வருகிறது. அரசு சார்பில் அனுப்பப்படும் கோப்புகளை பல்வேறு கேள்விகள் கேட்டு திருப்பி அனுப்புவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இதனால் அதிகாரிகள் மீது எம்.எல்.ஏ.க்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் அரசுக்கு ஒத்துழைப்பு தராத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் செல்வம் எச்சரிக்கை விடுத்தார். சமீபத்தில் நிதித்துறை செயலாளரும், தலைமை தேர்தல் அதிகாரியுமான ஜவகர் தலைமை தேர்தல் அதிகாரி தவிர அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டார். இதுதொடர்பாக தலைமை செயலாளர் ராஜீவ்வர்மா, நிதித்துறை மந்திரியும், முதல்-மந்திரியுமான ரங்கசாமியிடம் ஆலோசிக்காமல் இந்த உத்தரவை பிறப்பித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் தலைமை செயலாளருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே தலைமை செயலாளர் ராஜீவ் வர்மாவும் தன்னை இடமாற்றம் செய்யும் படி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கோரிக்கை விடுத்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில், புதுச்சேரி தலைமை செயலாளராக சரத் சவுகான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அருணாச்சலப்பிரதேசத்தில் அரசு அதிகாரியாக பணியாற்றி வந்த சரத் சவுகான் புதுச்சேரி தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை செயலாளராக பதவி வகித்து வந்த ராஜீவ் வர்மா சண்டிகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.