மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்க "சஞ்சய் சிங்கிற்கு" அனுமதி மறுப்பு
|மதுபான கொள்கை வழக்கில் சஞ்சய் சிங் மீதான குற்றச்சாட்டு உரிமைக் குழுவில் விசாரணையில் உள்ளதால் பதவியேற்புக்கு அனுமதிக்க முடியாது என ஜகதீப் தன்கர் சிங் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவை எம்.பி.யான சஞ்சய் சிங்கை அமலாக்கத்துறை கடந்த ஆண்டு கைது செய்து சிறையில் அடைத்தது.
மேலும் அவரை சி.பி.ஐ., அமலாக்கத்துறை அதிகாரிகள் தனித்தனியே நீதிமன்ற காவலில் எடுத்து மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதத்துடன் சஞ்சய் சிங்கின் மாநிலங்களவை உறுப்பினருக்கான பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், ஆம் ஆத்மி தரப்பில் மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க நீதிமன்றத்திடம் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், பிப்ரவரி 5ம் தேதி மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றுக் கொள்ள அனுமதி அளித்தது.
இந்நிலையில், மாநிலங்களவையில் மாநிலங்களவை எம்.பி.யாக சஞ்சய் சிங் பதவியேற்றுக் கொள்ள அவைத்தலைவர் ஜகதீப் தன்கர் சிங் அனுமதி மறுத்துள்ளார். சஞ்சய் சிங் மீதான குற்றச்சாட்டு உரிமைக் குழுவில் விசாரணையில் உள்ளதால் பதவியேற்புக்கு அனுமதிக்க முடியாது என ஜகதீப் தன்கர் சிங் தெரிவித்துள்ளார்.