< Back
தேசிய செய்திகள்
சிவசேனாவுக்கு துரோகம் செய்யும் படி மிரட்டியும் நான் கேட்காததால் சிறையில் அடைக்கப்பட்டேன் - சஞ்சய் ராவத்
தேசிய செய்திகள்

சிவசேனாவுக்கு துரோகம் செய்யும் படி மிரட்டியும் நான் கேட்காததால் சிறையில் அடைக்கப்பட்டேன் - சஞ்சய் ராவத்

தினத்தந்தி
|
13 Oct 2022 3:58 AM IST

சிவசேனாவுக்கு துரோகம் செய்யும் படி மிரட்டியும் நான் கேட்காததால் சிறையில் அடைக்கப்பட்டேன் என சஞ்சய் ராவத் தனது தாய்க்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.

தாய்க்கு எழுதிய கடிதம்

சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி. பத்ராசால் மோசடி தொடர்பான சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இவர் பத்ராசால் மோசடியில் தொடர்புடைய பிரவின் ராவத்திடம் இருந்து பணப்பலன்கள் பெற்றதாக அமலாக்கத்துறை தரப்பில் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சஞ்சய் ராவத் தான் கைது செய்யப்பட்ட ஒரு வாரத்திற்கு பிறகு தனது தாய்க்கு சிறையில் இருந்து எழுதிய கடிதம் டுவிட்டரில் வெளியிடப்பட்டது. அதில் அவர் கூறியிருப்பதாவது:-

சிவசேனா தாய்

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும், சிவசேனா தொண்டர்களும் உங்களின் சொந்த குழந்தைகளை போன்றவர்கள். நான் சிறையில் இருக்கும் வரை அவர்கள் உங்களை நன்றாக கவனித்துக்கொள்வார்கள்.

என்மீதான குற்றச்சாட்டுகள் பொய்யாக, போலியாக கட்டமைக்கப்பட்டு உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். எனக்கு எதிரான வாக்குமூலங்கள் துப்பாக்கி முனையில் பெறப்பட்டுள்ளது.

சுதந்திர போராட்ட வீரர்களான லோக்மான்ய திலக் மற்றும் விநாயக் தாமோதர் சாவர்க்கர் போன்றவர்களும் இதுபோன்ற மோசமான நடத்தைக்கு ஆளாகி உள்ளனர்.

உங்களை போலவே சிவசேனாவும் எனது தாய்தான். என் அம்மாவுக்கு(கட்சிக்கு) துரோகம் செய்ய வேண்டும் என்று எனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஆளும் அரசுக்கு எதிராக பேசக்கூடாது என மிரட்டல் வந்தது. ஆனால் நான் மிரட்டலுக்கு செவிசாய்க்கவில்லை. இதனால் உங்களிடம் இருந்து விலகி இருக்க நேர்ந்துள்ளது.

கட்சி ஆதரவு

சிவசேனா தலைவர் உத்தவ் தக்கரே எனது அன்பான நண்பர் மற்றும் தலைவர். மராட்டியத்தின் ஆன்மாவை கொல்ல முடியாது என்பதால் நான் நிச்சயமாக சிறையில் இருந்து வெளிவருவேன் என உங்களுக்கு உறுதி அளிக்கிறேன்.

இவ்வாறு அவர் கடிதத்தில் கூறியுள்ளார்.

அமலாக்கத்துறை சஞ்சய் ராவத்தை கைது செய்து அழைத்து சென்றபோது, அவரது தாயார் அவரை கட்டிப்பிடித்து அழுதது குறிப்பிடத்தக்கது.

இதேபோல சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் கடந்த 2 மாதங்களில் நடைபெற்ற 2 பெரிய பொதுக்கூட்டங்களில் சஞ்சய் ராவத் பெயர் எழுதப்பட்ட ஒரு நாற்காலியை கட்சியினர் காலியாக வைத்திருந்தனர். இது கட்சி அவருக்கு எவ்வளவு வலுவாக ஆதரவளிக்கிறது என்பதை வெளிப்படுத்தியது.

இதேபோல உத்தவ் தாக்கரே மற்றும் அவரது மனைவி ராஷ்மி தாக்கரேவும் ரஞ்சய் ராவத்தின் குடும்பத்தினரை அடிக்கடி சந்தித்து தங்கள் ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்