இட ஒதுக்கீடு வழங்குவதை சங் பரிவார் ஒருபோதும் எதிர்க்கவில்லை - ஆர்.எஸ்.எஸ். தலைவர் உறுதி
|இட ஒதுக்கீடு தேவைப்படும் வரை அது வழங்கப்பட வேண்டும் என்பதே சங் பரிவாரின் கருத்து என்று மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்,
நாடாளுமன்ற தேர்தல் பிரசார களத்தில் தலித், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரம் பெரும் பேசுபொருளாகி இருக்கிறது.
இந்த நிலையில் குறிப்பிட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை சங் பரிவார் ஒருபோதும் எதிர்க்கவில்லை என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.
ஐதராபாத்தில் கல்வி நிறுவனம் ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் பேசும்போது இது தொடர்பாக அவர் கூறுகையில், 'இட ஒதுக்கீடு தேவைப்படும் வரை அது வழங்கப்பட வேண்டும் என்பதே சங் பரிவாரின் கருத்து' என தெரிவித்தார்.
நாக்பூரில் கடந்த ஆண்டு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போதும் அவர் இதே கருத்தை தெரிவித்தார். அதாவது, வெளியே தெரியாவிட்டாலும் சமூக பாகுபாடு இன்னும் இருக்கிறது என்றும், இத்தகைய பாகுபாடு இருக்கும் வரை இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.