மேற்கு வங்காளத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துங்கள்.. தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் பரிந்துரை
|மேற்கு வங்காளத்தில் குற்றவாளிகள் அரசாங்கத்துடன் கைகோர்த்து செயல்படுவதாக பட்டியலினத்தவர் தேசிய ஆணைய தலைவர் குற்றம்சாட்டினார்.
கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தில் ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ஷேக் ஷாஜகானுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன. அவருக்கு எதிராக, வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் சந்தேஷ்காளி கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஷேக் ஷாஜகான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தங்கள் நிலங்களை அபகரித்துக் கொண்டதாகவும் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் பெண்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஷேக் ஷாஜகானை கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.
பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் கூறிய தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளன.
"திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்வார்கள். ஏதேனும் அழகான பெண், குறிப்பாக திருமணமான இளம்பெண் அல்லது சிறுமி இருந்தால், அவர்களை கட்சி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அவர்களை பாலியல் பலாத்காரம் செய்வார்கள். அவர்கள் திருப்தி அடையும்வரை அந்த பெண்ணை அங்கேயே வைத்திருப்பார்கள்" என ஒரு பெண் கூறியிருக்கிறார்.
ஷேக் ஷாஜகான் இப்போது ஊரில் இல்லாததால், பல ஆண்டுகளாக தாங்கள் அனுபவித்து வரும் சித்ரவதைகள் குறித்து பேசும் தைரியம் வந்திருப்பதாகவும் பெண்கள் கூறுகின்றனர். ஷேக் ஷாஜஹான் மட்டுமின்றி அவரது நெருங்கிய உதவியாளர்களும் இந்த வன்கொடுமையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டினார்கள்.
மேற்கு வங்காளத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை மற்றும் மகளிர் ஆணையம் விசாரணை நடத்துகின்றன. கவர்னர் நேரில் சென்று பெண்களிடம் விசாரித்ததுடன், நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தார்.
தேசிய பட்டியலினத்தவர் ஆணையத்தின் குழுவினரும் சந்தேஷ்காளி கிராமத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர். பாதிக்கப்பட்ட பெண்களிடம் விசாரணை நடத்தி அவர்களின் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தனர். அதன்பின்னர் பட்டியலினத்தவர் ஆணைய குழுவினர் ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் அறிக்கை சமர்ப்பித்தனர். அதில், மேற்கு வங்காள மாநிலத்தில் நிலைமை மோசமாக இருப்பதால் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தவேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தபின், ஆணையத்தின் தலைவர் அருண் ஹல்தர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சந்தேஷ்காளி மக்களுக்கு நடந்த கொடுமைகள் மற்றும் வன்முறைகள் பற்றி தெரிவித்த அவர், மேற்கு வங்காளத்தில் குற்றவாளிகள் அரசாங்கத்துடன் கைகோர்த்து செயல்படுவதாக குற்றம்சாட்டினார். மேலும், சந்தேஷ்காளியில் நடந்த வன்முறைகள் பட்டியல் சமூகங்களைச் சேர்ந்த மக்களையும் பாதிக்கிறது என்றார்.