< Back
தேசிய செய்திகள்
சந்தேஷ்காளி விவகாரம்: ஷேக் ஷாஜகான் சி.பி.ஐ.யிடம் ஒப்படைப்பு
தேசிய செய்திகள்

சந்தேஷ்காளி விவகாரம்: ஷேக் ஷாஜகான் சி.பி.ஐ.யிடம் ஒப்படைப்பு

தினத்தந்தி
|
7 March 2024 4:27 AM IST

ஷாஜஹான் ஷேக்கை கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவுப்படி, சி.பி.ஐ., காவலில் எடுத்து விசாரணை நடத்த துவங்கி உள்ளது.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கானாக்கள் மாவட்டத்தின் சந்தேஷ்காளியை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர், ஷாஜகான் ஷேக். இவரும், அவரது ஆதரவாளர்களும் பாலியல் தொல்லை மற்றும் நில ஆக்கிரமிப்பு செய்ததாக அப்பகுதியை சேர்ந்த பெண்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு போராட்டத்தில் குதித்தனர்.

முன்னதாக ரேஷன் முறைகேடு வழக்கில் அவரது வீட்டில் கடந்த ஜனவரி மாதம் சோதனை நடத்த சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகளை ஷேக்கின் ஆதரவாளர்கள் தாக்கினர்.

இந்த சம்பவங்களால் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டன. அத்துடன் மாநில திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தின. நீண்ட காலமாக தலைமறைவாக இருந்த ஷாஜகான் ஷேக் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவர் மீது கொலை, பணம் பறித்தல், நில மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

அவர் மீது நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. ஷாஜகான் ஷேக் மீது மேற்கு வங்காள போலீசார் பதிவு செய்திருந்த வழக்குகளின் அடிப்படையிலும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இந்த விசாரணையை தொடர்ந்து ஷாஜகான் ஷேக்குக்கு சொந்தமான ரூ.12.78 கோடி அசையும் மற்றும் அசையா சொத்துகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முடக்கினர். அந்தவகையில் சந்தேஷ்காளி மற்றும் கொல்கத்தாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், விவசாய நிலம் உள்ளிட்ட 14 அசையா சொத்துகள் முடக்கப்பட்டன. இவற்றை தவிர அவரது 2 வங்கி கணக்குகளையும் அதிகாரிகள் முடக்கினர். மேலும் இந்த விவகாரத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் திரிணமுல் காங்கிரஸ் பிரமுகர் ஷாஜஹான் ஷேக்கை கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவுப்படி, சி.பி.ஐ., காவலில் எடுத்து விசாரணை நடத்த துவங்கி உள்ளது.

இதனிடையே சஸ்பெண்ட் செய்யப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகரை மம்தா பானர்ஜி பாதுகாப்பதாக பா.ஜனதா கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் செய்திகள்