சந்தேஷ்காளி விவகாரம்; மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - வானதி சீனிவாசன்
|சந்தேஷ்காளியில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க விடாமல் திரிணாமுல் காங்கிரஸ் தடுப்பதாக வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
கொல்கத்தா,
மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காளி கிராமத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷாஜகான், அப்பகுதி மக்களின் சொத்துக்களை மிரட்டி அபகரித்ததாகவும், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறி சந்தேஷ்காளியில் பெண்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.
இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே அப்பாவி மற்றும் ஏழைப் பெண்கள் துன்புறுத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை தானாக முன்வந்து விசாரிப்பதாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சந்தேஷ்காளி விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெளிப்படைத் தன்மையுடன் நடந்துகொள்ளவில்லை என பா.ஜ.க. தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. திரிணாமுல் காங்கிரஸ் அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படவில்லை. சந்தேஷ்காளியில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க விடாமல் எதிர்கட்சி பெண் எம்.பி.க்களை அவர்கள் தடுப்பது ஏன்? எதை மறைக்கப் பார்க்கிறார்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.
அதேசமயம் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து பா.ஜ.க. மவுனம் காப்பதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த வானதி சீனிவாசன், "பா.ஜ.க. ஆளும் எந்த மாநிலத்திலும் இதுபோன்ற சம்பவங்களில் குற்றவாளிகளை நாங்கள் காப்பாற்றியதில்லை. இதுபோன்ற குற்றங்களை நாங்கள் சகித்துக் கொள்ள மாட்டோம். ஆனால் மேற்கு வங்கத்தின் நிலை வேறு" என்று தெரிவித்தார்.