< Back
தேசிய செய்திகள்
சந்தேஷ்காளி விவகாரம்; பாதிக்கப்பட்ட பெண்கள் பிரதமர் மோடியுடன் சந்திப்பு
தேசிய செய்திகள்

சந்தேஷ்காளி விவகாரம்; பாதிக்கப்பட்ட பெண்கள் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

தினத்தந்தி
|
6 March 2024 6:54 PM IST

சந்தேஷ்காளி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினர்.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஷேக் ஷாஜகான் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள், சந்தேஷ்காளி பகுதியில் உள்ள பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், அவர்களுடைய நிலங்களை அபகரித்து கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக ஷேக் ஷாஜகானின் ஆதரவாளர்கள் பலர் கைது செய்யப்பட்ட நிலையில், நீண்ட நாட்கள் தலைமறைவாக இருந்த ஷேக் ஷாஜகான் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே ஷேக் ஷாஜகானை 6 ஆண்டுகள் கட்சியில் இருந்து நீக்கம் செய்வதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அறிவித்தது.

இந்த சூழலில் மேற்கு வங்க மாநிலத்திற்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்குள்ள வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் பசாராத் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியபோது, "சந்தேஷ்காளி பெண்களுக்கு நடந்தது ஒரு தேசிய அவமானம். சந்தேஷ்காளி புயல் மேற்கு வங்கம் முழுவதும் வீசும். பெண்களின் சக்தியால் மக்களவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வீழ்த்தப்படும்" என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து சந்தேஷ்காளி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினர். அவர்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து பிரதமரிடம் எடுத்துரைத்ததாகவும், தங்களுக்கு நீதி கிடைப்பதை பிரதமர் மோடி உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டதாகவும் மேற்கு வங்க பா.ஜ.க. பொதுச்செயலாளர் அக்னிமித்ரா பவுல் தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் சந்தேஷ்காளியைச் சேர்ந்த பெண் ஒருவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மாநில அரசின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லாததால், எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை வைத்தோம். எங்கள் கோரிக்கைகளை அவர் பொறுமையாக கேட்டறிந்தார். எங்களுக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறோம்" என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்