< Back
தேசிய செய்திகள்
மணல் குவாரி வழக்கு: தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு சரமாரி கேள்வி
தேசிய செய்திகள்

மணல் குவாரி வழக்கு: தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு சரமாரி கேள்வி

தினத்தந்தி
|
24 Feb 2024 2:40 AM IST

மணல் குவாரி வழக்கு விசாரணையை 26-ந் தேதிக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

புதுடெல்லி,

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவைவிட கூடுதலாக மணலை அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். இது தொடர்பாக 10 மாவட்ட கலெக்டர்கள், நீர்வளத்துறை முதன்மை என்ஜினீயர், ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை என்ஜினீயர் ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

இதை எதிர்த்து தமழக அரசின் பொதுப்பணித்துறை செயலாளர், நீர்வளத்துறை கூடுதல் செயலாளர் மற்றும் 5 மாவட்ட கலெக்டர்கள் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, சம்மனுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. அதே நேரம் விசாரணைக்கு தடைவிதிக்கவில்லை. இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்தது.

இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பேலா எம் திரிவேதி, பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எப்படி ரிட் மனு தாக்கல் செய்ய முடியும்? அமலாக்கத்துறை விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டாமா? என தமிழ்நாடு அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர். பின்னர் இது தொடர்பாக தமிழக அரசும், அமலாக்கத்துறையும் பதில் அளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 26-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

மேலும் செய்திகள்