மண்ணில் புதைந்து தொழிலாளி பலி
|சூரத்கல் அருகே மண்ணில் புதைந்து தொழிலாளி பலியானார். மற்றொருவர் கவலைக்கிடமாக உள்ளார்.
மங்களூரு:
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே சூரத்கல் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சேலாரு பகுதியில் தரைமட்ட ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலம் பகுதியில் தண்டவாளங்கள் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் அந்த பகுதியை சேர்ந்த ஓபலேஸ்வரப்பா, கோவிந்தப்பா, திம்மப்பா, ஏரண்ணா, சஞ்சீவா மற்றும் அவரது மனைவி ரேகா ஆகியோர் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ரெயில் ஒன்று சென்றது. ரெயில் சென்ற அதிர்வில் அந்த பகுதியில் இருந்த மண் சரிந்து விழுந்தது. அப்போது அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்கள் மீது மண் குவியல் விழுந்தது.
இதில் மண் குவியலுக்கு இடையே அவர்கள் சிக்கினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மண் சரிந்து விழுந்ததில் ஒபலேஸ்வரப்பா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கோவிந்தப்பா உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் சேலான காயங்களுடன் உயிர் தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும், சூரத்கல் போலீசார் சம்பவ இடத்திற்கும் வந்து பார்வையிட்டனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து ரெயில்வே நிர்வாகம் சார்பிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.