< Back
தேசிய செய்திகள்
சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்; விரைவில் தீர்வு காண தமிழக முதல்-அமைச்சருக்கு மத்திய மந்திரி கடிதம்
தேசிய செய்திகள்

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்; விரைவில் தீர்வு காண தமிழக முதல்-அமைச்சருக்கு மத்திய மந்திரி கடிதம்

தினத்தந்தி
|
25 Sept 2024 7:25 PM IST

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில் விரைவில் தீர்வு காணும்படி, தமிழக முதல்-அமைச்சருக்கு மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா கடிதம் எழுதியுள்ளார்.

புதுடெல்லி,

சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆலையின் தொழிலாளர்கள் கடந்த 9-ந்தேதி முதல் ஆலைக்கு அருகே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிக சம்பளம், பணிநேரம் குறைப்பு மற்றும் ஆலையில் சங்கத்திற்கான அங்கீகாரம் ஆகியவற்றை வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது.

எனினும், போராடும் தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என ஆலை நிர்வாகம் தெரிவித்தது. அவர்கள் வேலைக்கு வராவிட்டால் சம்பளம் பிடித்தம் மற்றும் பணி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கை செய்யப்படும் என சாம்சங் நிறுவனம் தெரிவித்தது. ஆனால், தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை மந்திரியான டாக்டர் மன்சுக் மாண்டவியா, தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் நடந்து வரும் தொழிலாளர்கள் போராட்டத்தில் விரைவில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என தெரிவித்து இருக்கிறார்.

இந்த விவகாரத்தில் திறமையாக தீர்வு காண்பதற்கு மாநில அரசுக்கு உதவ, தன்னுடைய அமைச்சகம் முழு ஆதரவை வழங்கும் என்றும் அவர் கடிதத்தில் தெரிவித்து உள்ளார். இந்த சூழலில், தற்காலிக பணியாளர்களை கொண்டு ஆலையில் உற்பத்தி தொடர்ந்து வருகிறது. முதல்நாளில் வேலைநிறுத்தம் எதிரொலியாக 50 சதவீதம் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டது. ஆனால், இந்த பாதிப்பு குறைந்து விட்டது என நிறுவன வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

மேலும் செய்திகள்