ஒரே பாலின திருமணத்துக்கு அங்கீகாரம் கோரும் மனுக்கள்: சுப்ரீம் கோர்ட்டில் இன்று தீர்ப்பு
|ஒரே பாலின திருமணத்துக்கு அங்கீகாரம் கோரும் மனுக்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) தீர்ப்பு அளிக்கிறது.
புதுடெல்லி,
ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் மணம்புரியும் ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அரசியல்சாசன அமர்வு இந்த மனுக்களை விசாரித்துவருகிறது.
இதுதொடர்பான விவாதம் கடந்த ஏப்ரல் 18-ந்தேதி தொடங்கியது.
மத்திய அரசு வாதம்
அந்த விவாதத்தின்போது மத்திய அரசு, ஒரே பாலின திருமணத்துக்கு அங்கீகாரம் கோரும் மனுக்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு வெளியிடும் எந்த அரசியல்சாசன பிரகடனமும் சரியாக இருக்காது. காரணம், அதனால் ஏற்படும் விளைவுகளை சுப்ரீம் கோர்ட்டு கணிக்க முடியாது என்று வாதிட்டது.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக 7 மாநிலங்களின் பதில்களை பெற்றுள்ளதாகவும், ஒரே பாலின திருமணத்துக்கு ராஜஸ்தான், ஆந்திரா, அசாம் அரசுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன என்றும் கூறியது.
இன்று தீர்ப்பு
அதன்பிறகு கடந்த மே 11-ந்தேதி, இந்த மனுக்கள் மீதான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது.
இந்த நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) தீர்ப்பு அளிக்கிறது. அதன்பிறகு அதுகுறித்த விவரம் சுப்ரீம் கோர்ட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.