< Back
தேசிய செய்திகள்
உ.பி. சட்ட மேல்-சபையில் சமாஜ்வாடி கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 9 ஆக குறைவு - எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது!
தேசிய செய்திகள்

உ.பி. சட்ட மேல்-சபையில் சமாஜ்வாடி கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 9 ஆக குறைவு - எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது!

தினத்தந்தி
|
8 July 2022 6:23 PM IST

உத்தரபிரதேச சட்ட மேல்-சபையில் சமாஜ்வாடி கட்சி எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்துள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேச சட்ட மேல்-சபை 1887-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. முதலில் 9 உறுப்பினர்களை கொண்டதாக இருந்தது. 100 உறுப்பினர்களை கொண்டதாக விரிவுபடுத்தப்பட்டது.

உத்தரப் பிரதேச சட்டமேல்-சபையில் சமாஜ்வாடி கட்சியின் பலம் தேவையான 10 எம்.எல்.சிக்களுக்கு கீழே குறைந்ததால், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்துள்ளது.

மே 27 அன்று, சமாஜ்வாதி கட்சி, அதன் 11 உறுப்பினர்களுடன், மேல்-சபையில் மிகப்பெரிய எதிர்க்கட்சியாக இருந்தது. இந்நிலையில், ஜூலை 7 அன்றுடன், சமாஜ்வாதி கட்சி உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிந்தது.இதனால் கவுன்சிலில் சமாஜ்வாதி கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒன்பதாக குறைந்தது.

இது பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெறுவதற்கு தேவையான 10 தலைவர்களின் எண்ணிக்கையை விட ஒன்று குறைவாகும். இதனையடுத்து உத்தரப் பிரதேச சட்டமேல்-சபையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்துள்ளது.

மேலும், காங்கிரஸ் சார்பில் ஒரே எம்.எல்.சி.யாக இருந்த தீபக்சிங்கின் பதவிக்காலம் முடிவடைந்தது. இதையடுத்து, கடந்த 113 ஆண்டுகளில், உத்தரபிரதேச சட்ட மேல்-சபையில் முதல் முறையாக காங்கிரசுக்கு பிரதிநிதித்துவம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டு நடந்த உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால், புதிதாக யாரையும் மேல்-சபைக்கு அனுப்ப முடியாத நிலை உள்ளது.

அதே சமயத்தில், 100 உறுப்பினர்களை கொண்ட மேல்-சபையில், 72 உறுப்பினர்களுடன் ஆளும் பா.ஜனதா வலிமையான இடத்தில் உள்ளது.

இது குறித்து சமாஜ்வாதி கட்சி தலைவர் ஒருவர் கூறுகையில், "சமாஜ்வாடி கட்சி சட்ட மேல்-சபையில் இரண்டாவது பெரிய கட்சியாக இருப்பதால், அதன் தலைவரை எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரிக்க வேண்டும். இல்லாவிட்டால் இதை எதிர்த்து கோர்ட்டுக்கு செல்வோம். இது போன்ற செயல்களின் மூலம் ஆளும் பாஜக ஜனநாயகத்தை படுகொலை செய்கிறது" என்றார்.

மேலும் செய்திகள்