உணவில் உப்பு கூடியது - சமையல்காரர் படுகொலை; நூதன முறையில் சிக்கிய குற்றவாளிகள்
|மராட்டியத்தில் உணவில் உப்பு கூடியதற்காக சமையல்காரரை படுகொலை செய்த சம்பவத்தில் போலீசார் நூதன முறையை கையாண்டு குற்றவாளிகளை பிடித்துள்ளனர்.
புனே,
மராட்டியத்தின் புனே நகரில் சகான் ஷிக்ராப்பூரில் உள்ள தபா ஒன்றில் சமையல்காரராக பணியாற்றிய நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு உள்ளார். இதன்பின், 2 நாட்கள் கழித்து யாருக்கும் தெரியாமல் உடலை குற்றவாளிகள் புதைக்க சென்றபோது அதனை தொழிலாளி ஒருவர் பார்த்துள்ளார்.
சில நாட்களுக்கு அமைதியாக இருந்த அவர், சமூக ஆர்வலர் ஒருவரிடம் இதுபற்றி கூறியுள்ளார். அதனை கேட்ட சமூக ஆர்வலர், போலீசாரை தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு படுகொலை சம்பவம் பற்றி கூறி விட்டு தொலைபேசியை வைத்து விட்டார்.
காவலர்களுக்கு குற்றவாளிகளை பிடித்து, முறையாக விசாரணை செய்வதற்கு ஏதேனும் சாட்சியம் வேண்டும். இந்த வழக்கில் அப்படி எதுவும் அல்லாத நிலையில், சமையல்காரர் பணியாற்றிய தபாவின் பெயர் மட்டும் தெரிந்திருந்தது.
இதனை தொடர்ந்து, வாடிக்கையாளர் போல் தபாவுக்கு சென்று உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டு உள்ளனர். அப்போது, ஓட்டல் உரிமையாளர்களாக இருந்த 2 பேரை அவர்களுக்கு தெரியாமல் புகைப்படம் எடுத்து கொண்டனர்.
இதன்பின்பு, அவற்றை சமூக ஆர்வலருக்கு அனுப்பி வைத்து உள்ளனர். அவர், தொழிலாளியிடம் புகைப்படங்களை காண்பித்து உள்ளார். அவர் குற்றவாளிகளை அடையாளம் காட்டி உள்ளார்.
இதனை தொடர்ந்து, போலீசார் தபா உரிமையாளர்களான ஓம்கார் கேந்திரே (வயது 21) மற்றும் அவரது சகோதரர் கைலேஷ் கேந்திரே (வயது 19) ஆகிய இருவரையும் கைது செய்தனர். முதலில் அவர்கள் மறுத்தபோதும், பின்னர் உண்மையை ஒப்பு கொண்டனர்.
அதில், கடந்த அக்டோபர் 26-ந்தேதி பிரசன்ஜீத் கோராய் (வயது 35) என்ற அந்த சமையல்காரர் படுகொலை செய்யப்பட்ட உண்மையை ஒப்பு கொண்டனர். தபாவில் வேலைக்கு சேர்ந்து 8 நாட்களில் கோராய் கொல்லப்பட்டு உள்ளார்.
உணவில் அவர் சற்று கூடுதலாக உப்பு போட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த தபா உரிமையாளர்கள், கடைசியில் கோராயை கொடூர கொலை செய்துள்ளனர். 2 நாட்கள் கழித்து இரவில் உடலை நீர் நிறைந்த குழியில் புதைக்க சென்ற இடத்தில் இவை அனைத்தும் நபர் ஒருவரால் பார்க்கப்பட்டு உள்ளது. அவர் அளித்த தகவலை தொடர்ந்தே, குற்ற பிரிவின் போலீசார் அடங்கிய குழு இதனை கண்டறிந்து உள்ளனர். ஒரு மாதத்திற்கு பின் துப்பு துலங்கி குற்றவாளிகளை போலீசார் பிடித்து உள்ளனர்.