சல்மான் கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரம் - பிரபல ரவுடியின் சகோதரருக்கு லுக்-அவுட் நோட்டீஸ்
|சல்மான் கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரம் தொடர்பாக பிரபல ரவுடியின் சகோதரருக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மும்பை,
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீடு, மராட்டிய மாநிலம், மும்பை, பாந்த்ரா பகுதியில் உள்ள கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளது. இந்த அடிக்குமாடி குடியிருப்பின் வெளிப்பகுதியில் கடந்த 14ந் தேதி காலை 5 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றனர்.
சல்மான் கானுக்கு ஏற்கெனவே 'ஒய் பிளஸ்' பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து அவரது வீட்டு முன்பு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து சல்மான் கான் வீட்டு முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். இவர்களை மும்பை குற்றப்பிரிவு போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது சகோதரர் அன்மோல் பிஷ்னோய் ஆகிய இருவருக்கும் தொடர்பு இருப்பதாக மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதில் லாரன்ஸ் பிஷ்னோய் ஏற்கனவே மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அவரது சகோதரர் அன்மோல் பிஷ்னோய்க்கு எதிராக மும்பை போலீசார் லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.