< Back
தேசிய செய்திகள்
கர்நாடகத்தில் மின் ஊழியர்களுக்கு 20 சதவீத சம்பள உயர்வு
தேசிய செய்திகள்

கர்நாடகத்தில் மின் ஊழியர்களுக்கு 20 சதவீத சம்பள உயர்வு

தினத்தந்தி
|
16 March 2023 2:50 AM IST

இன்று(வியாழக்கிழமை) முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்த நிலையில் மின்துறை ஊழியர்களுக்கு 20 சதவீத சம்பளத்தை உயர்த்தி கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

பெங்களூரு:

இன்று(வியாழக்கிழமை) முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்த நிலையில் மின்துறை ஊழியர்களுக்கு 20 சதவீத சம்பளத்தை உயர்த்தி கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

சம்பள உயர்வு

கர்நாடக அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க 7-வது ஊதிய குழு மாநில அரசால் அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு இன்னும் தனது அறிக்கையை வழங்கவில்லை. இந்த நிலையில் அந்த குழுவின் இடைக்கால அறிக்கையை பெற்று சம்பள உயர்வு வழங்க கோரி அரசு ஊழியர்கள் சங்கம் கடந்த 1-ந் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது. இதையடுத்து முதல் நாளே, மாநில அரசு 17 சதவீத சம்பள உயர்வு வழங்குவதாக அறிவித்தது. இதையடுத்து அவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

இந்த நிலையில் மின்துறை ஊழியர்கள், தங்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று கோரி இன்று(வியாழக்கிழமை) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர். இதனால் மாநிலத்தில் மின் வினியோகத்தில் கடும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உண்டானது. மின் வினியோம் நிறுத்தப்பட்டால், ஒட்டுமொத்த கர்நாடகமும் முடங்கும் நிலை ஏற்படும். தொழில் நிறுவனங்களும் பாதிக்கப்படும். இதனால் விழித்துக்கொண்ட கர்நாடக அரசு, மின்துறை ஊழியர்களுக்கு 20 சதவீத சம்பள உயர்வு வழங்கப்படும் என்றும், இதை கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் முன்தேதியிட்டு அமல்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.

நிதித்துறை ஒப்புதல்

இதுகுறித்து மின்துறை மந்திரி சுனில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கர்நாடக மின்துறை ஊழியர்கள் சங்கத்தினர் மற்றும் பிற மின் வினியோக ஊழியர்கள் சங்கத்தினர் சம்பள உயர்வு வழங்குமாறு கேட்டுள்ளனர். அவர்களின் கோரிக்கை குறித்து நிதித்துறையின் ஒப்புதலை கேட்டு இருந்தோம். அதற்கு நிதித்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் இதுபற்றி மின்துறை ஊழியர்கள் சங்க நிர்வாகிகளுடன் நேற்று(நேற்று முன்தினம்) ஆலோசனை நடத்தினோம்.

அதன்பிறகு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையுடன் விவாதிக்கப்பட்டது. அங்கு எடுக்கப்பட்ட முடிவின்படி, மின்துறை ஊழியர்களுக்கு 20 சதவீத சம்பள உயர்வு வழங்கப்படும். இந்த சம்பள உயர்வு கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் முன் தேதியிட்டு அமல்படுத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

போக்குவரத்து ஊழியர்கள்

இந்த நிலையில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் சம்பள உயர்வு வழங்க கோரி வருகிற 21-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். இதனால் பஸ் போக்குவரத்து முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த வேலை நிறுத்தம் தொடங்குவதற்கு முன்னரே அரசு சம்பள உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிடுமா? என்ற எதிர்பார்ப்பு ஊழியர்களிடையே ஏற்பட்டுள்ளது.

சட்டசபை தேர்தல் நேரம் என்பதால், அரசு இதை தீவிரமாக எடுத்து கொண்டு உரிய தீர்வு காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பஸ்களின் சேவை முடங்கினால், அரசு மீது மக்களின் கோபம் அதிகரித்து அது தேர்தலில் எதிரொலிக்கும் நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடக அரசு 20 சதவீத சம்பள உயர்வை முன்தேதியிட்டு அறிவித்ததை தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.

மேலும் செய்திகள்