காவி தேசிய கொடியில் ஒரு நிறம்; காங்கிரசுக்கு அதிலென்ன அதிருப்தி? கர்நாடக முதல்-மந்திரி கேள்வி
|தேசிய கொடியில் ஒன்றான காவி நிறத்தின் மீது காங்கிரசுக்கு என்ன அதிருப்தி வந்துள்ளது? என்று கர்நாடக முதல்-மந்திரி கேள்வி எழுப்பியுள்ளார்.
பெங்களூரு,
கர்நாடகாவில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. சுவாமி விவேகானந்தர் பெயரில் மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் 8,100 புதிய வகுப்பறைகளை கட்ட அரசு முடிவு செய்துள்ளது.
அனைத்து வகுப்பறைகளிலும், ஒரே கட்டமைப்பில், காவி வண்ணத்தில் அமைக்க அரசு திட்டமிட்டு உள்ளது. அவற்றின் சுவர்கள் மற்றும் தூண்களில் சுவாமி விவேகானந்தர் கூறிய வாசகங்கள் இடம் பெறும்.
இந்த திட்டம் முறைப்படி இன்று குழந்தை தினத்தில் கலபுரகி மாவட்டத்தில் தொடங்கப்படும் என அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
காங்கிரஸ் எம்.எல்.ஏ. மற்றும் அதன் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகனான பிரியங்க் கார்கே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
ஆசிரியர்கள் பற்றாக்குறை, புத்தகங்கள், சீருடைகள், மதிய உணவு ஆகியவை இல்லாமை, படிப்பில் இருந்து பாதியில் மாணவ மாணவிகள் வெளியேறுதல் மாநிலத்தில் காணப்படுகிறது. ஆனால், பள்ளிகளுக்கு காவி நிறம் பூசுவதில் அரசு ஆர்வம் காட்டுகிறது என அவர் டுவிட்டரில் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.
இந்த நிலையில், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மலரஞ்சலி செலுத்தினார்.
இதன்பின்னர் பொம்மை இதற்கு பதிலளிக்கும் வகையில் கூறும்போது, இதுபோன்ற விசயங்களில் அரசியல் செய்வது சரியல்ல. காவி தேசிய கொடியில் ஒரு நிறம். அதனை பார்க்கும்போது, காங்கிரசுக்கு ஏன் அதிருப்தி ஏற்படுகிறது என கேள்வி எழுப்பியுள்ளார்.