சபரிமலை தந்திரி பொறுப்பை மகனிடம் ஒப்படைக்க முடிவா..? கண்டரரு ராஜீவரு மறுப்பு
|ஆகஸ்ட் 16-ம்தேதி வழிபாட்டுக்காக சபரிமலை கோவில் நடை திறக்கப்படும்போது, கண்டரரு பிரம்மதத்தன் தந்திரி பொறுப்பை ஏற்க உள்ளதாகவும் தகவல் பரவியது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலின் முக்கிய பூஜைகளை கேரள மாநிலம் செங்கனூர் பகுதியை சேர்ந்த தாழமண் தந்திரி குடும்பத்தை சேர்ந்தவர்களே நடத்தி வருகின்றனர். சபரிமலை அய்யப்பன் கோவில் குறித்த அனைத்து முக்கிய முடிவுகளையும் தாழமண் தந்திரி குடும்பத்தினர்தான் எடுப்பார்கள்.
தற்போது சபரிமலை அய்யப்பன் கோவில் தந்திரியாக (தலைமை பூசாரி) கண்டரரு ராஜீவரு, கண்டரரு மகேஷ் மோகனரு ஆகியோர் இருந்து வருகின்றனர். இவர்கள் இருவரும்தான் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தந்திரி பொறுப்பில் இருப்பார்கள்.
இந்த நிலையில் தந்திரி பொறுப்பில் இருந்து கண்டரரு ராஜீவரு விலக முடிவு செய்துள்ளதாகவும், தந்திரி பொறுப்பை மகன் கண்டரரு பிரம்மதத்தனிடம் வழங்க உள்ளதாகவும் சமீபத்தில் செய்தி வெளியானது. ஆகஸ்ட் 16-ம்தேதி வழிபாட்டுக்காக கோவில் நடை திறக்கப்படும்போது, கண்டரரு பிரம்மதத்தன் பொறுப்பேற்க உள்ளதாகவும், அன்றைய தினம் அவரது முன்னிலையிலேயே கோவில் நடையை மேல்சாந்தி திறக்க உள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டது.
இந்த செய்தி வைரலாக பரவிய நிலையில், பதவி விலகல் தொடர்பான தகவலை கண்டரரு ராஜீவரு மறுத்துள்ளார்.
இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், "இந்த தகவல் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. எனது மகன் எனது பூஜைக்கு உதவியாக சில காலம் இருந்துள்ளார். அதேபோல் இந்த முறையும் எனக்கு உதவியாக இருப்பார்" என்றார்.
இந்த ஆண்டு முதல் சபரிமலை பூஜைகளில் தன் தந்தைக்கு முழு நேரமும் உதவியாக இருக்க கண்டரரு பிரம்மதத்தன் முடிவு செய்துள்ளார். சட்டத்துறையில் பணியாற்றி வந்த அவர், சபரிமலை பூஜை பணிகளில் கவனம் செலுத்துவதற்காக அந்த பணியை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது என் தந்தைக்கு உதவ வேண்டும் என்பதே எனது விருப்பம், அவரிடமிருந்து தந்திரி பொறுப்பை பெறுவது விருப்பம் அல்ல என்று பிரம்மதத்தன் தெரிவித்தார். தந்தையின் வழிகாட்டுதலின் கீழ் தந்திரியின் பணிகளைச் செய்ய விரும்புவதாகவும் அவர் கூறுகிறார்.