சபரிமலை: மண்டல பூஜை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது
|டிசம்பர் 30-ஆம் தேதி மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு 2024-ம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதி நடை அடைக்கப்படும்.
திருவனந்தபுரம்,
சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடப்பு சீசனையொட்டி கடந்த மாதம் 16 -ந் தேதி நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது. தினமும் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து, இருமுடி கட்டி முன்பதிவு செய்து அய்யப்பனை தரிசனம் செய்து வருகிறார்கள். சபரிமலைக்கு பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நீண்ட வரிசையில் 9 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து தரிசனம் செய்து வருகிறார்கள்.
ஆன்லைன் தரிசனத்திற்கு இதுவரை எந்த வித கட்டுப்பாடுகளும் இல்லாததால், நேரடியாக நிலக்கல் வந்து உடனடி தரிசன முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதாவது சராசரி 10 ஆயிரம் பக்தர்கள் தினசரி இந்த வகையில் முன்பதிவு செய்து சபரிமலையில் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
தற்போது 17 மணி நேரம் நேரம் சபரிமலையில் நடை திறந்து வழிபாடு நடக்கிறது. பக்தர்கள் வருகை அதிகரித்து வரும் நிலையில், நடை திறப்பு நேரத்தை 18 மணி நேரமாக அதிகரிக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். அதாவது தினசரி மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்ட பின் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. அதனை மாற்றி 3 மணிக்கு திறந்தால் கூடுதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியும் என கூறப்படுகிறது.
இதனிடையே வரும் டிசம்பர் 27-ம் தேதி சபரிமலையில் மண்டல பூஜை நடைபெற உள்ளது. அன்றைய தினம் மண்டல பூஜை நிறைவடைந்து நடை அடைக்கப்படும். பின்னர் மீண்டும் 30-ம் தேதி மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு 2024-ம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதி நடை அடைக்கப்படும்.
மேலும் 2024-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம் நடைபெறுகிறது. இந்த சூழலில் மகர விளக்கு கால பூஜைக்கான முன்பதிவு துவங்கியுள்ளது. பக்தர்கள் வழக்கம் போல சபரிமலையின் http://www.sabarimalaonline.org என்ற அதிகாரபூர்வ இணைய தளத்தில் முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.