ரஷிய வெளியுறவு மந்திரியுடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை
|இந்தியா வந்துள்ள ரஷிய வெளியுறவு மந்திரியுடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
புதுடெல்லி,
இந்தியாவில் நடைபெறும் ஜி20 நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் 2 நாள் மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் நேற்று முன்தினம் இரவு டெல்லி வந்தார். அவருடன் மத்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
அந்த பேச்சுவார்த்தையில், இரு தரப்பு ஒத்துழைப்பு, ஜி20 நாடுகள் தொடர்பான விஷயங்கள் இடம்பெற்றன. மேலும் உக்ரைன் போர் சம்பந்தமாக மேற்கத்திய நாடுகளுடன் ரஷியாவின் மோதல் அதிகரித்துவரும் நிலையில் அதுகுறித்தும் அவர்கள் இருவரும் பேசியதாக தெரிகிறது.
இதுதொடர்பாக வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், 'ஜி20 வெளியுறவு மந்திரிகள் மாநாட்டையொட்டி, ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினேன். அப்போது இருதரப்பு ஒத்துழைப்பு, ஜி20 நாடுகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்த கருத்துகளை நாங்கள் பகிர்ந்துகொண்டோம்' என்று தெரிவித்துள்ளார்.
ரஷிய வெளியுறவு மந்திரியின் இந்திய பயணத்தையொட்டி அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் வௌியிட்ட செய்திக்குறிப்பில், 'உலகின் முன்னணி பொருளாதார நாடுகளின் மதிப்புக்குரிய அமைப்பாக ஜி20-ஐ ரஷியா கருதுகிறது. இங்கு அனைவரின் நலன் கருதி, சமமான, அனைவரின் ஒப்புதல் பெற்ற முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்தியாவின் ஜி20 தலைமைப் பொறுப்புக்கும், அனைத்து நாடுகளையும் ஒற்றுமைப்படுத்தும் அதன் திட்டத்துக்கும் நாங்கள் ஆதரவு அளிக்கிறோம். இந்தியாவின் செயல்பாடு, பலதரப்பு ராஜதந்திரத்தில் தன்னம்பிக்கையை மீட்பதுடன், உலக பொருளாதார சிதைவையும் தடுக்கும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.