கப்பன் பூங்காவில் காதல் ஜோடிகளுக்கு கட்டுப்பாடு
|கப்பன் பூங்காவில் காதல் ஜோடிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரு:
பெங்களூரு கப்பன் பூங்காவுக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருகிறார்கள். அதுபோல், காதல் ஜோடிகளும் அதிகஅளவில் வருகை தருவது உண்டு. இவ்வாறு வருகை தரும் காதல் ஜோடிகள் பூங்காவில் நீண்ட நேரம் அமர்ந்து பேசுவதுடன், ஆபாசமான செயல்கள் உள்ளிட்ட அத்துமீறல்களில் ஈடுபடுகிறார்கள். இது குழந்தைகளுடன் பூங்காவுக்கு வரும் குடும்பத்தினரை முகம் சுழிக்க வைக்கிறது. இதுபற்றி பூங்காவுக்கு வரும் பொதுமக்கள், தோட்டக்கலைத்துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். பொதுமக்களின் புகார்கள் எதிரொலியாக கப்பன் பூங்காவுக்கு வரும் காதல் ஜோடிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அதாவது பூங்காவுக்கு வரும் காதல் ஜோடிகள் அங்குள்ள இருக்கைகளில் அருகருகே அமரக்கூடாது. ஆபாசமான செயல்களில் ஈடுபடக்கூடாது. எந்த விதமான அத்துமீறல்களிலும், அடுத்தவர்கள் முகம் சுழிக்கும் விதமாகவும் நடந்து கொள்ள கூடாது. அத்துமீறலில் ஈடுபடும் காதல் ஜோடி பற்றி அங்குள்ள காவலாளி ஒலி பெருக்கி மூலமாக எச்சரிப்பார். அதையும் மீறி காதல் ஜோடிகள் ஆபாசமாகவோ, அத்துமீறல்களில் ஈடுபட்டாலோ காவலாளிகள் மூலமாக பூங்காவில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. காதல் ஜோடிகளின் அத்துமீறல்களுக்கு கடிவாளம் போடுவதற்காக இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.