ஆர்.எஸ்.எஸ். பேரணி; தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
|ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு தொடர்பான தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதியளிக்க பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என கூறி தாக்கல் செய்யப்பட்ட கோர்ட்டு அவமதிப்பு வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு தனி நீதிபதி, சுற்றுச்சுவருடன் கூடிய மைதானங்களில் அணிவகுப்பு நடத்த அனுமதியளிக்கும்படி உத்தரவிட்டிருந்தார்.
அந்த உத்தரவை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். சார்பில் ஐகோர்ட்டில் 45 மேல்முறையீட்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வு ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில், பொதுச்சாலைகளில் பேரணி நடத்துவது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை. இதுபோன்ற அணிவகுப்புகள், கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளதே தவிர, முழுமையாகத் தடை செய்ய முடியாது. சட்டம்-ஒழுங்கை பராமரிக்க வேண்டியது மாநில அரசின் கடமை. அந்த வகையில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு தேவையான பாதுகாப்பை வழங்கி, அதன் அடிப்படை உரிமையை உறுதி செய்திருக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் சுற்றுச்சுவருடன் கூடிய மைதானங்களில் பேரணி நடத்த வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள், அனுமதி அளிக்க வேண்டும் என கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த அரசுக்கும், போலீசுக்கும் உத்தரவிட்டனர்.
3 தேதிகளை குறிப்பிட்டு, பேரணிக்கு அனுமதி கோரி அரசிடம் விண்ணப்பிக்கும்படி ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அந்த 3 தேதிகளில், ஒரு தேதியில் பேரணி நடத்த அனுமதி வழங்கும்படி அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர். ஒழுக்கத்தை கடைப்பிடித்து பேரணி நடத்த வேண்டும் என்றும், பிறரை தூண்டும் வகையில் நடத்தக்கூடாது என்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு உத்தரவிட்டுள்ளனர். அமைதியான முறையில் பேரணி நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசுக்கும் உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவுக்கு தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளர் பணீந்தர ரெட்டி சார்பில் வக்கீல் ஜோசப் அரிஸ்டாட்டில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவில், கருத்துரிமை, பொது இடத்தில் கூடும் உரிமை போன்ற அடிப்படை உரிமைகளுக்கு பொதுநலன் கருதி நியாயமான கட்டுப்பாடுகளை அரசு விதிக்க முடியும். ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி அளித்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். எனவே இந்த விவகாரத்தில் ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் தமிழ்நாடு அரசின் சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி ஆஜராகி, தமிழ்நாடு முழுவதும் பேரணி நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கோரிக்கை விடுத்தது. ஆனால் வீதிதோறும் பேரணியை அனுமதிக்க முடியாது என்றும், சுற்றுச்சுவருக்குள், விளையாட்டு அரங்கம் போன்றவற்றில் நடத்துவதற்கு அனுமதி வழங்குவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்தது. அதை ஐகோர்ட்டு தனிநீதிபதி ஏற்று உத்தரவு பிறப்பித்தார். ஆனால் இரு நீதிபதிகள் அமர்வு, விருப்பப்படும் இடங்களில் பேரணிக்கு அனுமதிக்க வேண்டும் என கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ளது. பேரணி மார்ச் 5-ந் தேதி நடைபெற உள்ளது. எனவே, தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை அவசரமாக வெள்ளிக்கிழமை விசாரிக்க வேண்டும் என முறையிட்டார். அதை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு, ஆர்.எஸ்.எஸ். பேரணி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மார்ச் 3-ந் தேதி (நாளை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.