'ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தில் சதி' அசோக் கெலாட் சொல்கிறார்
|அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
ஜெய்ப்பூர்,
அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இதன் பின்னணியில் சதி இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், ராஜஸ்தான் முதல்-மந்திரியுமான அசோக் கெலாட் குற்றம் சாட்டியுள்ளார்.
கோட்டாவில் நடந்த காங்கிரசாரின் போராட்டம் ஒன்றில் பேசும்போது அவர் கூறுகையில், 'விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், சமூக பதற்றம், ஏழை-பணக்காரர் இடைவெளி அதிகரிப்பு போன்றவைதான் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் வைக்கப்பட்ட முக்கிய பிரச்சினைகளாக இருந்தன. இந்த பயணத்தின் வெற்றியால் ராகுல் காந்தியின் செல்வாக்கு அதிகரித்ததால் சிலர் அச்சமடைந்தனர். இதனால் சதி செய்து அவரை மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்துள்ளனர்' என தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இருந்து ராகுல் காந்தியை வெளியேற்றியதற்கான விளைவுகளை பா.ஜனதா எதிர்கொள்ளும் எனக்கூறிய அவர், இந்த விவகாரத்தில் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து இருப்பதாகவும், இது ஒரு நல்ல அறிகுறி என்றும் கூறினார்.