மாநகராட்சி ஊழியர் கொலை வழக்கில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் 11 பேருக்கு ஆயுள் தண்டனை நெய்யாற்றின்கரை கோர்ட்டு தீர்ப்பு
|மாநகராட்சி ஊழியர் கொலை வழக்கில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் 11 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நெய்யாற்றின்கரை கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
திருவனந்தபுரம்,
திருவனந்தபுரம் மாவட்டம் ஆனாவூரை சேர்ந்தவர் நாராயணன் நாயர் (வயது 52). மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த இவர், திருவனந்தபுரம் மாநகராட்சியில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருடைய மகன் சிவபிரசாத், காட்டாக்கடையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார்.
இவர் இந்திய மாணவர் அமைப்பின் வெள்ளறடை பகுதி செயலாளராக இருந்தார். சிவபிரசாத்திற்கும் அதே பகுதியை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த தொண்டர்கள் சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் 5-ந்தேதி நள்ளிரவு ஒரு மர்ம கும்பல் சிவபிரசாத்தின் வீட்டிற்குள் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்து அவரை கொலை செய்ய முயன்றனர்.
இந்த சம்பவத்தில் சிவபிரசாத் மற்றும் தடுக்க முயன்ற நாராயணன் நாயர், அவரது மனைவி விஜயகுமாரி மற்றும் சிவபிரசாத்தின் சகோதரன் கோபகுமார் ஆகியோருக்கும் வெட்டு விழுந்தது. இதில் படுகாயமடைந்த 4 பேரும் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நாராயணன் நாயர் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளறடை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த ராஜேஷ் (46), அனில் (31), பிரசாத் குமார் (34), கிரீஷ்குமார் (40), பிரேம்குமார் (35), அருண்குமார் (35), பைஜூ(41), அஜயன் (32), சசிகுமார் (42), பினுகுமார் (42), கிரீஷ் (47) ஆகிய 11 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு நெய்யாற்றின்கரை கூடுதல் மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி கவிதா கங்காதரன், குற்றம் சாட்டப்பட்ட ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் 11 பேருக்கும் ஆயுள் தண்டனையும், குற்றவாளிகளான ராஜேஷ், அனில், கிரீஷ்குமார் ஆகியோருக்கு தலா 1 லட்சம் அபராதமும், மற்ற அனைவருக்கும் தலா ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.