தவறான சிகிச்சையால் பாதிப்பு; பெண்ணுக்கு ரூ.9¼ லட்சம் இழப்பீடு
|தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.9¼ லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பல் டாக்டருக்கு நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கொள்ளேகால்:
தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட ெபண்ணுக்கு ரூ.9¼ லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பல் டாக்டருக்கு நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சுயநினைவை இழந்த பெண்
சாம்ராஜ்நகரை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது தாய் சுகன்யா. இவர் பல் வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் சுகன்யா கடந்த பிப்ரவரி மாதம் 3-ந்தேதி டவுனில் உள்ள கிரிஜா பல் கிளினிக்கிற்கு சிகிச்சைக்காக சென்றார். அப்போது அங்கு இருந்த பல் டாக்டர் மஞ்சுநாத், சுகன்யாவுக்கு சிகிச்சை அளித்தார்.
அப்போது பல்லில் கிருமி அதிகமாக இருப்பதாகவும் அதனை சுத்தம் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு சுகன்யா சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து டாக்டர் மஞ்சுநாத், சுகன்யாவின் பல்லை சுத்தம் செய்வதற்காக அவருக்கு வலி நிவாரணி கொடுத்துள்ளார். அந்த வலி நிவாரணி செலுத்தியதும் சுகன்யா திடீரென்று மயக்கம் போட்டு விழுந்தார். மேலும் சுயநினைவை இழந்தார். இதனால் டாக்டரும், சுகன்யாவின் மகன் ரவிக்குமாரும் அதிர்ச்சி அடைந்தனர்.
நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு
பின்னர் டாக்டர் மஞ்சுநாத், தனது காரில் சுகன்யாவை அழைத்து சென்று மைசூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கு சிகிச்சை அளித்தும் சுகன்யாவுக்கு நினைவு வரவில்லை. 2 நாட்கள் கழித்தும் அவருக்கு நினைவு வந்தது. ஆனால், அவரால் நடக்க முடியவில்லை. டாக்டர் மஞ்சுநாத் அளித்த தவறான சிகிச்சையால் தான் தனது தாய்க்கு இந்த நிலைமை ஏற்பட்டதாக சுகன்யாவின் மகன் ரவிக்குமார், மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரியிடம் டாக்டர் மஞ்சுநாத் மீது புகார் அளித்தார். மேலும் டாக்டர் மஞ்சுநாத் தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறி, மாவட்ட நுகர்வோர் கோர்ட்டிலும் ரவிக்குமார் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் நடந்து வந்தது.
ரூ.9.24 லட்சம் இழப்பீடு
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தவறான சிகிச்சை அளித்த டாக்டர் மஞ்சுநாத், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.9.24 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறி உத்தரவிட்டார். அதாவது, மருத்துவ செலவு ரூ.6 லட்சமும், வழக்கு செலவு ரூ.10 ஆயிரமும் சேர்த்து மொத்தம் ரூ.9.24 லட்சம் வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர் மஞ்சுநாத், இந்த உத்தரவை எதிர்த்து பெங்களூருவில் உள்ள மாநில நுகர்வோர் கோர்ட்டில் மேல்முறையீடு ெசய்ய முடிவு செய்துள்ளார்.