காங்கிரஸ் துணை தலைவரிடம் ரூ.80 ஆயிரம் மோசடி
|காங்கிரஸ் பிரமுகரிடம், ஓட்டலில் அறையை முன்பதிவு செய்ய ரூ.80 ஆயிரம் கட்டணம் வசூலித்து மோசடி செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த டிராவல்ஸ் ஏஜென்சி நிறுவன உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
மங்களூரு:
காங்கிரஸ் பிரமுகரிடம், ஓட்டலில் அறையை முன்பதிவு செய்ய ரூ.80 ஆயிரம் கட்டணம் வசூலித்து மோசடி செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த டிராவல்ஸ் ஏஜென்சி நிறுவன உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
கர்நாடக காங்கிரஸ் துணை தலைவர்
கர்நாடக காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும், எம்.எல்.சி.யுமாக இருந்து வருபவர் மஞ்சுநாத் பண்டாரி. இவர் கடந்த பிப்ரவரி மாதம் 20-ந் தேதி சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருந்தார். அதற்காக அங்குள்ள ஒரு தனியார் நட்சத்திர ஓட்டலில் அறையை முன்பதிவு செய்ய திட்டமிட்டார்.
அதன்படி மங்களூருவில் டிராவல் ஏஜென்சி நிறுவனம் நடத்தி வரும் தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ரூபன் என்பவரை அணுகினார். அதையடுத்து ரூபன் ராய்ப்பூரில் உள்ள அந்த நட்சத்திர ஓட்டலில் விசாரித்து அங்கு அறையை முன்பதிவு செய்தார். அதற்காக கட்டணமாக மஞ்சுநாத் பண்டாரியிடம் இருந்து ரூபன் ரூ.79 ஆயிரத்து 500-ஐ பெற்றுக் கொண்டார்.
டிராவல்ஸ் ஏஜென்சி உரிமையாளர்
பின்னர் அந்த ஓட்டலில் உள்ள அறைகள் அனைத்தையும் சத்தீஸ்கர் மாநில அரசு முன்பதிவு செய்தது. அதனால் மஞ்சுநாத் பண்டாரி முன்பதிவு செய்த அறை ரத்து செய்யப்பட்டது. மேலும் அதற்கான கட்டண தொகையையும் ஓட்டல் நிர்வாகத்தினர், டிராவல்ஸ் ஏஜென்சி உரிமையாளர் ரூபனிடம் திருப்பி கொடுத்தனர். அந்த பணத்தை பெற்றுக் கொண்ட ரூபன், அதை மஞ்சுநாத் பண்டாரியிடம் திருப்பிக் கொடுக்காமல் இருந்துவிட்டார்.
இந்த விஷயங்கள் மஞ்சுநாத் பண்டாரிக்கு தாமதமாக தெரியவந்தது. இதுபற்றி அவர் ரூபனிடம் கேட்டபோது அவர் சரியாக பதில் கூறாமல் மலுப்பி வந்தார். மேலும் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் இருந்து வந்தார்.
கைது செய்ய போலீசார் தீவிரம்
ரூபன் ஏமாற்றுவதை உணர்ந்த மஞ்சுநாத் பண்டாரி, தனக்கு சொந்தமான கல்லூரி மேலாளர் வசந்தா மூலம் இதுபற்றி மங்களூரு புறநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் கடந்த 18-ந் தேதி ரூபன் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.