தமிழகத்துக்கு ரூ.4,758 கோடி வரிப்பகிர்வு தொகை : மத்திய அரசு வழங்கியது
|தமிழகத்துக்கு ரூ.4,758 கோடி வரிப்பகிர்வு தொகையை மத்திய அரசு வழங்கியுள்ளது.
புதுடெல்லி,
தமிழகத்துக்கு ரூ.4,758 கோடி வரிப்பகிர்வு தொகையை மத்திய அரசு வழங்கியுள்ளது.
மாநில அரசுகளுக்கு மத்திய அரசு மாதந்தோறும் வரித்தொகையை பகிர்ந்து அளிக்கிறது. இதன்படி நேற்று ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்து 665 கோடியே 75 லட்சம் பகிர்ந்து அளிக்கப்பட்டது. இது வரிப்பகிர்வின் வழக்கமான மாதாந்திர தொகையின் 2 தவணைகள் ஆகும். மாதந்தோறும் ரூ.58,332.86 கோடி பகிர்ந்து அளிப்பது குறிப்பிடத்தக்கது.இந்த வரிப்பகிர்வில் தமிழகத்துக்கு ரூ.4 ஆயிரத்து 758.78 கோடி கிடைத்து இருக்கிறது.
அதிகபட்சமாக உத்தரபிரதேசத்துக்கு ரூ.20 ஆயிரத்து 928.62 கோடி வழங்கப்பட்டு இருக்கிறது. பீகாருக்கு ரூ.11 ஆயிரத்து 734.22 கோடி வழங்கப்பட்டு உள்ளது.
மத்திய பிரதேசத்துக்கு ரூ.9158.24 கோடியும், மேற்கு வங்காளத்துக்கு ரூ.8776.76 கோடியும், மராட்டிய மாநிலத்துக்கு ரூ.7369.76 கோடியும், ராஜஸ்தானுக்கு ரூ.7030.28 கோடியும், ஆந்திராவுக்கு 4,721.44 கோடியும், கேரளாவுக்கு ரூ.2,245.84 கோடியும், தெலுங்கானாவுக்கு ரூ.2,452.32 கோடியும் வழங்கப்பட்டு உள்ளது.
மாநில அரசுகள் தங்களது மூலதனம், வளர்ச்சி செலவுகளை உயர்த்துவதற்கு அதிகாரம் அளிக்கும் இந்திய அரசின் உறுதிபாட்டின்படி இந்த தொகை விடுவிக்கப்பட்டு இருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது.