< Back
தேசிய செய்திகள்
பெங்களூருவில் கடந்த ஒராண்டில் ரூ.117 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல்; 7,882 பேர் கைது
தேசிய செய்திகள்

பெங்களூருவில் கடந்த ஒராண்டில் ரூ.117 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல்; 7,882 பேர் கைது

தினத்தந்தி
|
27 Jun 2023 2:31 AM IST

பெங்களூருவில் மட்டும் கடந்த ஒரு ஆண்டில் ரூ.117 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளிநாட்டினர் உள்பட 7,882 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெங்களூரு:

பெங்களூருவில் மட்டும் கடந்த ஒரு ஆண்டில் ரூ.117 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளிநாட்டினர் உள்பட 7,882 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தயானந்த் பார்வையிட்டார்

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி பெங்களூருவில் கடந்த 2022-23-ம் ஆண்டில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு இருந்த போதைப்பொருட்கள் நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. அவற்றை போலீஸ் கமிஷனர் தயானந்த் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் பார்வையிட்டார்கள்.

பின்னர் போலீஸ் கமிஷனர் தயானந்த் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

ரூ.117 கோடி போதைப்பொருட்கள்

பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபடுவோரை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். பெங்களூருவில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ரூ.117 கோடிக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதாவது 6 ஆயிரத்து 261 கிலோ போதைப்பொருட்கள் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. ஒட்டு மொத்தமாக போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் அதை பயன்படுத்தியதாக நகரில் உள்ள போலீஸ் நிலையங்களில் 6 ஆயிரத்து 191 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தது.

7,882 பேர் கைது

இதில், 943 வழக்குகள் போதைப்பொருட்கள் விற்கும் வியாபாரிகள் மீதும், 5 ஆயிரத்து 248 வழக்குகள் போதைப்பொருட்கள் பயன்படுத்தியதாகவும் பதிவாகி இருக்கிறது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் போதைப்பொருட்கள் விற்பனை செய்ததாக நமது நாட்டை சேர்ந்தவர்கள் 7 ஆயிரத்து 723 பேரும், வெளிநாடுகளை சேர்ந்த 159 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒட்டு மொத்தமாக 7 ஆயிரத்து 882 பேர் கைதாகி இருக்கிறார்கள்.

பெங்களூருவில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களில் கஞ்சாவே அதிகமாகும். அதன்படி 6 ஆயிரத்து 75 கிலோ கஞ்சாவும், 5½ கிலோ கஞ்சா ஆயிலும், 2½ கிலோ பிரவுன் சுகர், 15½ கிலோ அபீம், 52½ எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள், 109 கிலோ பிற போதைப்பொருட்கள், காகித வடிவிலான 1,372 போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டடு இருக்கிறது.

கல்லூரிகள் அருகே சோதனை

தேசிய போதைப்பொருள் தடுப்பு மற்றும் ஒழிப்பு தினத்தன்று வியாபாரிகளிடம் இருந்து பறிமுதல் செய்த போதைப்பொருட்கள் நாசப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, சமீபத்தில் ரூ.92 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் நாசப்படுத்தப்பட்டு இருந்தது. இந்த ஆண்டு வியாபாரிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு இருக்கும் போதைப்பொருட்களும் கோர்ட்டு அனுமதி பெற்று நாசப்படுத்தப்படும்.

அதே நேரத்தில் பள்ளி, கல்லூரிகள் அருகே போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்கவும் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, பெங்களூரு நகரில் உள்ள 388 பள்ளிகள் மற்றும் 253 கல்லூரிகள் அருகே போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க சோதனை நடத்தி, விற்பனை செய்த வியாபாரிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

சொத்துகள் ஜப்தி

இதுதவிர பள்ளி, கல்லூரிகள், மருத்துவ கல்லூரிகளுக்கு சென்று மாணவர்கள் மத்தியில் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெங்களூருவில் இதுவரை 1.95 லட்சம் மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து போலீசாரால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க சட்ட ரீதியாகவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, போதைப்பொருட்கள் விற்பனை செய்து பணம் சம்பாதித்தவர்கள் வாங்கி வைத்திருக்கும் சொத்துகளை பற்றிய தகவல்களை சேகரித்து, அவற்றை சட்டப்படியாக ஜப்தி செய்யும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு தயானந்த் கூறினார்.

மேலும் செய்திகள்