துபாயில் இருந்து கடத்தல்: மங்களூரு விமான நிலையத்தில் ரூ.67 லட்சம் தங்கம் சிக்கியது
|துபாயில் இருந்து மங்களூருவுக்கு கடத்திய ரூ.67 லட்சம் மதிப்பிலான தங்கம் சிக்கி உள்ளது. இதுதொடர்பாக கேரள பயணிகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மங்களூரு: துபாயில் இருந்து மங்களூருவுக்கு கடத்திய ரூ.67 லட்சம் மதிப்பிலான தங்கம் சிக்கி உள்ளது. இதுதொடர்பாக கேரள பயணிகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மங்களூரு விமான நிலையம்
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு பஜ்பே பகுதியில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து வெளிநாடு, வெளிமாநிலங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் சட்டவிரோதமாக தங்கம், போதைப்பொருட்கள் கடத்தப்பட்டு வரும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதனால் தங்கம், போதைப்பொருள் கடத்தலை தடுக்க சுங்கத்துறை அதிகாரிகள், தொழில் பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
ரூ.67 லட்சம் தங்கம்
இந்த நிலையில் நேற்று காலை துபாயில் இருந்து மங்களூருவுக்கு வந்த 2 விமானங்களில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் அந்த விமானங்களில் வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது ஒருவர் தங்கத்தை உடைமைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்ததும், மற்றொருவர் வயிற்றுக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்ததும் தெரியவந்தது.
அவர்கள் 2 பேரிடமும் இருந்து முறையே 814 கிராம், 547 கிராம் என மொத்தம் ஒரு கிலோ 361 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துகொண்டனர். அவற்றின் மதிப்பு ரூ.67 லட்சம் ஆகும்.
2 பேர் கைது
அவர்கள் கேரளாவை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் சுங்கத்துறை அதிகாரிகள் பஜ்பே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.