< Back
தேசிய செய்திகள்
சட்டவிரோதமாக பேனர் வைப்போருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்-கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
தேசிய செய்திகள்

சட்டவிரோதமாக பேனர் வைப்போருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்-கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
3 Aug 2023 2:42 AM IST

பெங்களூரு அழகாக இருப்பது அரசுக்கு பிடிக்கவில்லையா? என்று கேள்வி எழுப்பியதுடன், சட்டவிரோதமாக பேனர்கள் வைப்போருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கும்படியும் கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பெங்களூரு:-

அரசுக்கு பிடிக்கவில்லையா?

கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு உள்பட பல மாவட்டங்களில் சட்டவிரோதமாக பிளக்ஸ், பேனர்கள், விளம்பர பலகைகள் வைக்கப்படுவதாகவும், அதன் மீது அரசும், மாநகராட்சியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு பொதுநல மனுதாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பி.பி.வராலே முன்னிலையில் நடைபெற்றது.

அப்போது மனுதாரர் மற்றும் அரசு தரப்பு வாதங்கள் முடிந்ததும் தலைமை நீதிபதி பி.பி.வராலே கூறுகையில், கர்நாடக சட்டசபை தேர்தலுக்காக பெங்களூருவில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிளக்ஸ், பேனர்கள் வைக்கப்பட்டது. இது தொடர்பாக 134 புகார்கள் மட்டுமே வந்துள்ளதாகவும், 40 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீது உள்ள புகார்கள் என்ன ஆனது. இதை பார்க்கும்போது, பெங்களூரு அழகாகவும், சுத்தமாகவும் இருப்பது அரசுக்கு பிடிக்கவில்லையா? என்று கேள்வி எழுப்பினார்.

ரூ.50 ஆயிரம் அபராதம்

மேலும் தலைமை நீதிபதி பேசுகையில், பெங்களூரு நகர் முழுவதும் பேனர்கள் வைக்கப்பட்டதற்கு அரசின் ஆட்சேனை என்ன? என்பதை தெரிவிக்க வேண்டும். சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்றுவதற்காக அரசும், பெங்களூரு மாநகராட்சியும் சுப முகூர்த்த நாளை எதிர்பார்த்து உள்ளதா?. பெங்களூரு நகரம் பற்றி முதலீட்டாளர்களுக்கு எந்த மாதிரியான தகவல்களை தெரிவிப்பீர்கள். இப்படி சட்டவிரோதமாக பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தால், முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் எப்படி? முன் வருவார்கள் என்று கேள்வி எழுப்பினார்.

பின்னர் சட்டவிரோதமாக பிளக்ஸ், பேனர்கள் வைப்போருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கும்படியும், பேனர்களை அகற்றாமலும், முறையான நடவடிக்கை எடுக்காமலும் அலட்சியமாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் பெங்களூரு மாநகராட்சிக்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இந்த மனு மீதான விசாரணையை ஒத்தி வைத்தார்.

மேலும் செய்திகள்