காங்கிரஸ் ஆட்சியில் ரூ.4.82 லட்சம் கோடி ஊழல்; பா.ஜ.க. வீடியோவால் பரபரப்பு
|காங்கிரஸ் ஆட்சியில் ரூ.4.82 லட்சம் கோடி ஊழல் நடந்து உள்ளது என காங்கிரஸ் பைல்ஸ் என்ற பெயரில் பா.ஜ.க. வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசிய வழக்கு ஒன்றில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
இதன் எதிரொலியாக, மக்களவை செயலகம் அவரது எம்.பி. பதவியை அதிரடியாக பறித்தது. இதன் தொடர்ச்சியாக, அரசு பங்களாவை காலி செய்ய கூறி, நோட்டீசும் அனுப்பப்பட்டது.
அதற்கு எதிராக மேல்முறையீடு செய்ய காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ள சூழலில், அவருக்கு எதிராக மற்றொரு அவதூறு வழக்கு பாய்ந்து உள்ளது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் 21-ம் நூற்றாண்டின் கவுரவர்கள் என பேசியதற்காக ராகுல் காந்தி மீது இந்த அவதூறு புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை நடந்த இந்திய ஒற்றுமை யாத்திரையின்போது, கடந்த ஜனவரி 9-ந்தேதி அரியானாவின் ஹரித்துவார் பகுதியில் ராகுல் காந்தி பேசும்போது, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரை கடுமையாக தாக்கி பேசினார்.
அவர் கூறும்போது, 21-ம் நூற்றாண்டின் கவுரவர்கள் காக்கி அரை கால் சட்டைகளை அணிந்து கொண்டு, இந்து பள்ளிகளை நடத்தி கொண்டு இருக்கின்றனர். அவர்களுக்கு ஆதரவாக நாட்டின் 2 முதல் 3 பணக்காரர்கள் உள்ளனர் என கூறியுள்ளார்.
அவரது இந்த பேச்சுக்கு எதிராக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தொண்டர் கமல் பதாரியா என்பவர் ஹரித்துவார் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இதனை சந்திக்க கட்சி தயாராகி வருகிறது. பிரதமர் மோடிக்கு எதிராக பேசியதற்காக மற்றொரு அவதூறு வழக்கும் ராகுல் காந்தி மீது பதிவாகி உள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு மற்றொரு அடியாக பா.ஜ.க. அடுத்த நடவடிக்கையை எடுத்து உள்ளது. காங்கிரஸ் கட்சியின் பதவி காலத்தில் நடந்த ஊழல்களை பட்டியலிட்டு காங்கிரஸ் பைல்ஸ் என்ற பெயரில் வீடியோ ஒன்றை பா.ஜ.க. இன்று வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
இதன்படி, அக்கட்சி தனது பதவி காலத்தில் ரூ.4.82 லட்சம் கோடி ஊழல் செய்து உள்ளது என குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளது.
பா.ஜ.க.வின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கில் வெளியிடப்பட்ட அந்த செய்தியில், காங்கிரஸ் பைல்சின் முதல் எபிசோடு. காங்கிரஸ் ஆட்சியின் கீழ் ஒன்றன் பின் ஒன்றாக நடந்த ஊழல்களை பாருங்கள் என அந்த வீடியோவுக்கு தலைப்பிடப்பட்டு உள்ளது.
காங்கிரஸ் என்றால் ஊழல் என பொருள், என்று தொடங்க கூடிய அந்த வீடியோவில், காங்கிரஸ் கட்சியின் 70 ஆண்டு கால ஆட்சியில், ரூ.4 கோடியே 82 லட்சத்து 69 ஆயிரம் கோடி பொதுமக்களின் பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.
அந்த பணம் ஆனது பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான பல பயனுள்ள பகுதிகளுக்கு பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என பா.ஜ.க தெரிவித்து உள்ளது.
இந்த தொகையை கொண்டு 24 ஐ.என்.எஸ். விக்ராந்த் போர் கப்பல்கள், 300 ரபேல் போர் விமானங்கள் மற்றும் ஓராயிரம் மங்கள் திட்ட பணிகளை உருவாக்கியோ அல்லது கொள்முதல் செய்தோ இருக்கலாம்.
ஆனால், இந்த நாடு காங்கிரசின் ஊழலை விலையாக தாங்க வேண்டி இருந்தது. வளர்ச்சிக்கான பந்தயத்திலும் பின்தங்கி காணப்பட்டது என்று வீடியோவில் தெரிவித்து உள்ளது. இது வெறும் டிரைலர் என்றும், படம் இன்னும் முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.