துபாயில் இருந்து மும்பைக்கு கடத்தப்பட்ட ரூ.4½ கோடி தங்கம் பறிமுதல் - 2 பேர் கைது
|விசாரணையில் 2 பேரும் ஒரே நபருக்காக துபாயில் இருந்து தங்கத்தை கமிஷன் பணத்துக்கு ஆசைப்பட்டு கடத்தி வந்தது தெரியவந்தது.
மும்பை,
துபாயில் இருந்து 2 பேர் அதிகளவு தங்கம் கடத்தி வர உள்ளதாக வருவாய் புலனாய்வு இயக்குனரக பிரிவு (டி.ஆர்.ஐ.) அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதிகாரிகள் சம்பவத்தன்று துபாயில் இருந்து மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தினர்.
இதில் டெல்லியை சேர்ந்த முகமது சுலைமான் என்ற பயணியின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதிகாரிகள் அவரை தனியாக அழைத்து சோதனை போட்டனர். அப்போது அவரிடம் இருந்து ரூ.2 கோடியே 40 லட்சம் மதிப்பிலான 4 கிலோ 300 கிராம் தங்க பசையை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் மற்றொரு விமானத்தில் வந்த அப்துல் பாசித் என்ற பயணியிடம் சோதனை நடத்திய போது அவர் உள்ளாடைகளில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தியது தெரியவந்தது. அதிகாரிகள் அவரிடம் இருந்து ரூ.2 கோடியே 15 லட்சம் மதிப்பிலான 4 கிலோ தங்க பசையை பறிமுதல் செய்தனர்.
அதிகாரிகள் நடத்திய விசாரணையில் 2 பேரும் ஒரே நபருக்காக துபாயில் இருந்து தங்கத்தை கமிஷன் பணத்துக்கு ஆசைப்பட்டு கடத்தி வந்தது தெரியவந்தது. சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.