கழிவுநீர் அகற்றும்போது உயிரிழப்பு ஏற்பட்டால் ரூ.30 லட்சம் நிவாரணம் - சுப்ரீம் கோர்ட் உத்தரவு
|தூய்மை பணியாளர்கள் கழிவு நீரை அகற்றும் போது மரணம் அடைந்து விட்டால் அவர்களுக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் தூய்மை தொழிலாளர்கள் மூலம் மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலை தொடர்ந்து வருகிறது. பாதாள சாக்கடைகளில் இறங்கி தூய்மை தொழிலாளர்கள் பணியாற்றும் சமயங்களில் விஷ வாயு தாக்கி, அவர்கள் இறக்கும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டே இருக்கின்றன. இதனால் கையால் மனிதக்கழிவை அகற்றுவதை தடுக்கும் வகையில் கடந்த 2013-ம் ஆண்டு மறுவாழ்வு சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனாலும் இந்த நிலை முழுவதுமாக தடுக்கப்படவில்லை.
சட்டம் இயற்றி 10 ஆண்டுகள் ஆனாலும் இந்த அவலம் தொடர்ந்து வருகின்றது. இந்நிலையில் கழிவுநீர் அகற்றும் பணியின்போது தொழிலாளர்கள் உயிரிழந்தால் அவர்களுக்கு குறைந்தது ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மேலும் கழிவுநீர் அகற்றும்போது படுகாயமடைந்து நிரந்தர உடல் பாதிப்பு அடைந்தால் ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும். மேலும் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை முற்றிலுமாக ஒழிக்க முழுமுயற்சி எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.