2024 காரீப் பருவத்திற்கான ரசாயன உரங்களுக்கு ரூ.24,420 கோடி மானியம் - மந்திரிசபை ஒப்புதல்
|பாஸ்பேட் உரங்களுக்கான மானியம் 2024 காரீப் பருவத்தில் கிலோவுக்கு ரூ.28.72 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில், எதிர்வரும் காரீப் பருவத்திற்கான பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் உரங்களுக்கு ரூ.24,420 கோடி மானியம் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;-
"2024-25 காரீப் பருவத்திற்காக ஏப்ரல் 1-ந்தேதி முதல் செப்டம்பர் 30-ந்தேதி வரை பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் உரங்களுக்கு ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியம் (NBS) ரூ.24,420 கோடி வழங்குவதற்கான உரத்துறையின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
2024-ம் ஆண்டில் காரீப் பருவத்திற்கான மானியம் நைட்ரஜன் (N) ஒரு கிலோவுக்கு ரூ.47.02 ஆகவும், பாஸ்பேட் (P) ஒரு கிராமுக்கு ரூ.28.72 ஆகவும், பொட்டாஷ் (K) ஒரு கிலோவுக்கு ரூ.2.38 ஆகவும், சல்பர் (S) ஒரு கிலோவுக்கு ரூ.1.89 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது டி.ஏ.பி. (டி-அம்மோனியம் பாஸ்பேட்) ஒரு மூட்டை(50 கிலோ) 1,350 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், வரவிருக்கும் 2024 காரீப் பருவத்திலும் அதே விலையில் தொடர்ந்து கிடைக்கும். அதே போல், மூரேட் ஆப் பொட்டாஷ் (MoP) ஒரு பை ரூ.1,670-க்கும், என்.பி.கே. ஒரு பை ரூ.1,470-க்கும் கிடைக்கும்."
இவ்வாறு அவர் தெரிவித்தார். பாஸ்பேட் உரங்களுக்கான மானியம், 2023 ராபி பருவத்தில் கிலோவுக்கு ரூ.20.82-ல் இருந்து 2024 காரீப் பருவத்தில் கிலோவுக்கு ரூ.28.72 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும், நைட்ரஜன் (N), பொட்டாசிக் (K) மற்றும் சல்பர் (S) ஆகியவற்றின் மீதான மானியம் 2024 காரீப் பருவத்தில் மாறாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.