மணிப்பூரில் வங்கிக்குள் புகுந்து ரூ.18.85 கோடி கொள்ளை - துப்பாக்கி முனையில் மிரட்டி முகமூடி கொள்ளையர்கள் அட்டூழியம்
|கொள்ளை சம்பவம் முழுவதும் வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
உக்ருல்,
மணிப்பூரில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் வங்கி ஒன்றில் புகுந்து ரூ.18.85 கோடியை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளை ஒன்று உள்ளது. நேற்று மாலை 5.40 மணியளவில் சுமார் 10 பேர் அடங்கிய கும்பல் ஒன்று ஆயுதங்களோடு, முகத்தை துணியால் மூடிக்கொண்டு வங்கிக்குள் புகுந்தது.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாவலர்களை தாக்கி உள்ளே நுழைந்த அந்த கும்பல், வங்கி ஊழியர்களை கயிறுகளால் கட்டி, கழிவறைக்குள் வைத்து பூட்டியது. வங்கி மேலாளரை மட்டும் துப்பாக்கி முனையில் மிரட்டி, லாக்கரை திறக்கச் செய்து உள்ளே இருந்த பணத்தை கொள்ளையடித்தது. பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டது. ரூ.18.85 கோடியை அவர்கள் கொள்ளையடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக உக்ருல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கொள்ளை சம்பவம் முழுவதும் வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அதனடிப்படையில் போலீசார், குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.