< Back
தேசிய செய்திகள்
ரூ.15 ஆயிரம் கோடியில் புறநகர் ரெயில் திட்டம்; பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

பெங்களூரு புறநகர் ரெயில் திட்ட பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தபோது எடுத்தபடம்.

தேசிய செய்திகள்

ரூ.15 ஆயிரம் கோடியில் புறநகர் ரெயில் திட்டம்; பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

தினத்தந்தி
|
20 Jun 2022 9:28 PM GMT

ரூ.15 ஆயிரம் கோடியில் பெங்களூரு புறநகர் ரெயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, கனவுகளை நனவாக்கும் நகரம் பெங்களூரு என புகழாரம் சூட்டினார்.

பெங்களூரு:

பிரதமர் மோடி வருகை

பிரதமர் நரேந்திரமோடி 2 நாள் சுற்றுப்பயணமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள நேற்று கர்நாடகம் வந்தார். இதற்காக அவர் டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்திற்கு நேற்று காலை 11.55 மணிக்கு வந்திறங்கினார். அவரை கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, கர்நாடக பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பின்னர் அவர் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மூளை ஆராய்ச்சி மையத்தை திறந்துவைத்து பார்வையிட்டார். அத்துடன் பகசி பார்த்தசாரதி ஆஸ்பத்திரி அமைக்க அடிக்கல் நாட்டினார். அதையடுத்து நாகரபாவிக்கு சென்ற பிரதமர் மோடி அங்கு டாக்டர்

அம்பேத்கர் பொருளாதார பல்கலைக்கழகத்தையும், அம்பேத்கரின் உருவச்சிலையையும் திறந்துவைத்தார். மேலும் மாணவ-மாணவிகளுடன் பிரதமர் மோடி சிறிது நேரம் கலந்துரையாடினார்.

ரூ.33 ஆயிரம் கோடியில் திட்டங்கள்

அதன் தொடர்ச்சியாக மத்திய அரசு-கர்நாடக அரசு ஆகியவை சார்பில் ரூ.33 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 19 வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்கும் விழா பெங்களூரு கெங்கேரி பகுதியில் உள்ள கொம்மகட்டாவில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

இதில் குறிப்பாக பெங்களூரு நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரூ.15 கோடி செலவில் பெங்களூரு புறநகர் ரெயில் திட்டத்துக்கு அவர் அடிக்கல் நாட்டினார். இந்த திட்டம் பெங்களூரு மக்களின் 40 ஆண்டு கால கனவு திட்டமாகும். அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி விழாவில் பேசியதாவது:-

ரூ.15 ஆயிரம் கோடியில் பெங்களூரு புறநகர் ரெயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். இது கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பே நிறைவேற்றப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் ஆட்சியில் இருந்தவர்களுக்கு ஈடுபாட்டு உணர்வு இருக்கவில்லை. இந்த திட்ட பணிகளை 40 மாதங்களில் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இரட்டை என்ஜின் அரசுகளால் இது சாத்தியமாகியுள்ளது.

போக்குவரத்து நெரிசல் குறையும்

மேலும் இந்த திட்டத்தால் பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் குறையும். இந்த புறநகர் ரெயில் திட்டம் மூலம் பெங்களூரு நகரின் உள்கட்டமைப்பு மேலும் அதிகரிக்கும். இந்த திட்டத்தால் பெங்களூரு நகர மக்களுக்கு பெரும் பயன் ஏற்படும். திறமை மிக்க பெங்களூரு நகர மக்கள் எளிதாக பயணிக்க இது உதவும். இந்த திட்டத்தால் பொருளாதார நடவடிக்கைகள் மேலும் அதிகரிக்கும். கடந்த 8 ஆண்டுகளில் கர்நாடகத்தில் ரெயில் உள்கட்டமைப்புகள் குறிப்பிடத்தக்க அளவில் உயர்த்தப்பட்டுள்ளன. இதனால் கோடிக்கணக்கான மக்களுக்கு பயன் ஏற்படும்.

கர்நாடகத்தில் போக்குவரத்துக்கு எளிதாக இருக்கும் வகையில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். ஆராய்ச்சி, புதுமைகளை புகுத்துதல், தொழில்நுட்ப உலகில் இந்தியாவிற்கு கர்நாடகம் பெரும் பங்களிப்பு அளிக்கிறது. இந்த நோக்கத்தில் புதிய தொழில்பயிற்சி நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் அவை புதிய தொழில்நுட்ப மையங்களாக மாறியுள்ளன. இது இளைஞர்களின் திறனை மேம்படுத்த உதவும், வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும்.

கட்டமைப்பு வசதிகள்

கடந்த 8 ஆண்டுகளில் மத்திய அரசு மேற்கொண்ட முடிவுகள் அவ்வளவு சுலபமானதாக இருக்கவில்லை. இதை எதிர்க்கட்சிகள் எதிர்த்தன. ஆனால் மக்கள் அவற்றை ஏற்றுக்கொண்டனர். கடந்த 8 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட ஒரு பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.7,500 கோடி) நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடுகள் செய்துள்ளன. இந்திய இளைஞர்கள் நினைத்தால் எதையும் சாதிப்பார்கள். பெங்களூரு திறன் வாய்ந்த நகரம். இங்கு மக்கள் மாற்றத்தை ஏற்றுக்கொள்கிறார்கள்.

பெங்களூருவில் வளர்ச்சியை ஏற்படுத்த எங்களின் இரட்டை என்ஜின் அரசுகள் தயாராக உள்ளன. தூய்மை, பாதுகாப்பு மற்றும் மக்களுக்கு ஏற்ற வகையில் ரெயில் போக்குவரத்தை நாங்கள் ஏற்படுத்தி இருக்கிறோம். பஸ், ரெயில், விமான போக்குவரத்துக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முன்னுரிமை அளித்து வருகிறோம். இதற்கு பிரதமரின் கதிசக்தி திட்டம் உதவுகிறது.

7 ரெயில்வே திட்டங்கள்

தேர்தலுக்கு முன்பு கர்நாடகத்தை மேம்படுத்துவோம் என்று உறுதியளித்தோம். அந்த உறுதி மொழியை நிறைவேற்றப்படுவதற்கு இந்த திட்டங்களே சாட்சி. இன்று 5 தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் மற்றும் 7 ரெயில்வே திட்டங்களை தொடங்கி வைத்துள்ளேன். தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ள திட்டங்களால் கல்வி, ஆராய்ச்சி, திறன் மேம்பாடு, உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு அடையும்.

இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக சிறுதொழில்கள் முக்கிய பங்காற்றுகின்றன. ரூ.200 கோடி வரையிலான திட்ட பணிகளுக்கு 25 சதவீத உபகரணங்கள் மற்றும் பொருட்களை சிறு தொழில் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளோம். இது தற்சார்பு இந்தியா திட்டத்திற்கு உதவும். இதன் பயனை 45 லட்சத்திற்கு மேற்பட்ட வணிகர்கள் பெற்றுள்ளனர். 2014-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் அதிகளவில் முதலீடுகள் வந்துள்ளன. சிறிய ரக விமானங்கள் முதல் பெரிய விமானங்கள் வரை உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைந்து வருகிறது.

சீர்திருத்தம் மட்டுமே புதிய உயரத்துக்கு...

கர்நாடகத்தின் முழுமையான வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவும். பையப்பனஹள்ளி ரெயில் நிலையம் நவீன வசதிகள் மற்றும் குளுகுளு வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளன. இது சுற்றுலா தலமாக மாறியுள்ளது. ஏராளமானவர்கள் அந்த ரெயில் நிலையத்தை வந்து பார்க்கிறார்கள். நாட்டிலேயே பெங்களூரு நகரம், கனவுகளை நனவாக்கும் நகரமாக உள்ளது. மத்திய அரசு மேற்கொள்ளும் முடிவுகள் மற்றும் சீர்திருத்தங்கள் மகிழ்ச்சி இல்லாதவையாக இருக்கலாம்.

ஆனால் அதன் பயன்களை நாடு உணரும். சீர்திருத்தம் மட்டுமே நாட்டையும், நம்மையும் புதிய உயரத்திற்கு அழைத்து செல்லும். விண்வெளி மற்றும் ராணுவத்துறை பல ஆண்டுகளாக அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதில் நாங்கள் தனியார் முதலீடுகளுக்கு அனுமதி அளித்துள்ளோம். அரசு வசதிகளை செய்து கொடுத்தால் சாதிக்க முடியும் என்பதை பெங்களூரு வெளிப்படுத்துகிறது.

இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனங்களை சிலர் குறைத்து மதிப்பிடுகிறார்கள். இதன் மூலம் நாட்டையும், கோடிக்கணக்கான மக்களையும் சிறுமைப்படுத்துகிறார்கள். அத்தகைய மனநிலை கொண்டவர்களுக்கு பெங்களூரு பாடம் புகட்டுகிறது. இன்று (நேற்று) தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள் பயன்பாட்டுக்கு வந்தால் மக்களின் வாழ்க்கை மேம்படும். அத்துடன் தொழில்கள் நடத்துவதும் எளிமையாகும். ஒரே நாடு வலுவான நாடு என்பதை பெங்களூரு பிரதிபலிக்கிறது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இதில் கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் உலக தரத்திற்கு மேம்படுத்தப்பட்டுள்ள பையப்பனஹள்ளி ரெயில் முனையத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். யஷ்வந்தபுரம் ரெயில் நிலையத்தை மேம்படுத்துவதற்கான பணிகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

100 சதவீதம் மின்மயம்

இதுதவிர பிரதமர் மோடி கொங்கன் ரெயில்வே 100 சதவீதம் மின்மயம் ஆக்கப்பட்டதையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார். அரிசிகெரே-துமகூரு மற்றும் எலகங்கா-பெனுகுன்டா ஆகிய இரட்டை ரெயில் பாதையையும் தொடங்கி வைத்தார்.

அந்த பாதையில் புதிய ரெயில் சேவையையும் பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியை முடித்து கொண்டு அவர் மாலை 4.50 மணிக்கு ஹெலிகாப்டரில் மைசூருவுக்கு புறப்பட்டு சென்றார். அங்கு அவர் மத்திய அரசின் பல்வேறு திட்ட பயனாளிகளுடன் கலந்துரையாடினார். மேலும் சுத்தூர் மடத்தில் நடந்த நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றார்.

யோகா தின விழாவில் பங்கேற்கிறார்

இரவில் மைசூருவில் தங்கும் பிரதமர் மோடி, இன்று (செவ்வாய்க்கிழமை) மைசூரு அரண்மனை வளாகத்தில் நடைபெறும் சர்வதேச யோகா தின விழாவில் கலந்துகொண்டு யோகாசனம் செய்கிறார். இதையொட்டி மைசூரு அரண்மனை வளாகம் மற்றும் மைசூரு நகரம் முழுவதும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து நெரிசல்; மன்னிப்பு கோரிய பிரதமர் மோடி

பிரதமர் மோடி வருகையால் பெங்களூருவில் மைசூரு ரோடு உள்பட பல்வேறு சாலைகளில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டன. இதனால் நகரின் பல்வேறு சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாரத்தின் முதல் நாள் என்பதால் வழக்கமாகவே வாகன நெரிசல் அதிகமாக இருக்கும். ஆனால் பிரதமரின் வருகையால் இந்த வாகன நெரிசல் மேலும் அதிகமாக இருந்தது. இதுகுறித்து தனது உரையின்போது குறிப்பிட்ட பிரதமர் மோடி, எனது இந்த பயணத்தால் பெங்களூரு நகர மக்கள் வாகன நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக மன்னிப்பு கோருகிறேன் என்று குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்