ஆபாச படத்தை காட்டி ஓட்டல் உரிமையாளரிடம் ரூ.15 லட்சம் பறிப்பு
|நெருக்கமாக இருக்கும் ஆபாச படத்தை காட்டி மிரட்டி ஓட்டல் உரிமையாளரிடம் ரூ.15 லட்சம் பறித்த பெண் உதவியாளரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
மும்பை அந்தேரி பகுதியில் உள்ள பிரபல ஓட்டலில் கடந்த ஆண்டு நிகிதா என்ற பெண், ஓட்டல் உரிமையாளரின் தனிப்பட்ட உதவியாளராக பணியில் சேர்ந்தார். அப்போது ஓட்டல் உரிமையாளரிடம் நெருங்கி பழகியதாக தெரிகிறது. கடந்த ஜனவரி மாதம் ஓட்டல் உரிமையாளரை தனது வீட்டிற்கு அந்த பெண் அழைத்து இருந்தார். வீட்டுக்கு வந்த அவருக்கு பெண் டீ போட்டு கொடுத்தார். இதனை பருகிய அவர் சிறிது நேரத்தில் மயங்கினார்.
அப்போது அந்த பெண், ஓட்டல் உரிமையாளர் தன்னுடன் நெருக்கமாகவும், ஆபாசமாகவும் இருந்தது போன்று தனது செல்போனில் பதிவு செய்தார். மயக்கம் தெளிந்த அவரிடம் ஆபாச படத்தை காட்டி ரூ.15 கோடி தர வேண்டும் என மிரட்டியதாக தெரிகிறது. அவ்வாறு பணம் தராவிட்டால் சமூக வலைதளத்தில் ஆபாச வீடியோவை பரப்பி விடுவதாகவும், தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக போலீசில் புகார் அளித்து விடுவதாகவும் மிரட்டினார்.
இதனால் பயந்து போன ஓட்டல் உரிமையாளர் முதலில் ரூ.15 லட்சம் கொடுத்துள்ளார். மீண்டும் பணம் கேட்டதால், ஓட்டல் உரிமையாளர் அம்போலி போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் அவருக்கு வந்த மிரட்டல் அழைப்பை விசாரித்தனர். இதில் நிகிதா பணம் கேட்டு மிரட்டல் விடுத்தது உறுதியானது. இதுகுறித்து போலீசார் நிகிதா மீது வழக்குப்பதிவு செய்து அவரை கடந்த 19-ந்தேதி கைது செய்தனர். மேலும், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.