கர்நாடகத்தில் காட்டு யானை தாக்கி உயிரிழப்போரின் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் நிவாரணம்; மாநில அரசு முடிவு
|கர்நாடகத்தில் காட்டு யானை தாக்கி உயிரிழப்போரின் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
பெங்களூரு:
காட்டு யானைகள் தாக்குதலில் இருந்து மனிதர்களை பாதுகாப்பது தொடர்பாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் பெங்களூருவில் கூட்டம் நடந்தது. இதில் கர்நாடக கலால்துறை மந்திரியும், ஹாசன் மாவட்ட பொறுப்பு மந்திரியுமான கோபாலய்யா, வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
யானை தாக்கி உயிரிழப்பவர்களின் குடும்பத்தினருக்கு தற்போது அரசு சார்பில் ரூ.7½ லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகையை இரட்டிப்பாக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதாவது உயிரிழப்பவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.15 லட்சம் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. யானை தாக்குதலால் நிரந்தரமான ஊனம் அடைபவர்களுக்கு தற்போது ரூ.5 லட்சம் வழங்கப்பட்டு உள்ளது. அந்த தொகையை ரூ.10 லட்சமாக உயர்த்தவும், பகுதி ஊனம் அடைபவர்களுக்கு வழங்கப்படும் நிவாரண தொகையை ரூ.2½ லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. யானைகள் சேதப்படுத்தப்படும் சொத்துக்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படுகிறது. சக்லேஷ்புரா-பேலூர் பகுதிகளில் அட்டகாசம் செய்து வரும் 8 யானைகளை பிடிக்க அனுமதி வழங்கப்படுகிறது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.