ஐக்கிய முற்போக்கு கூட்டணி பெயரில் செயல்பட்டு ரூ.12 லட்சம் கோடி ஊழல்; பாட்னாவில் அமித்ஷா பரபரப்பு பேச்சு
|பிரதமர் பதவி காலியாக இல்லை என பாட்னாவில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசியுள்ளார்.
பாட்னா,
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு வரவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அதற்கான பணியில் இப்போதிருந்தே செயல்பட்டு வருகின்றன. ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றாக கூடி, இந்தியா என்ற பெயரிலான கூட்டணியை உருவாக்கி உள்ளனர்.
ஆட்சியை தக்க வைக்க பா.ஜ.க.வும், தேர்தலில் ஆட்சியை பிடிக்க எதிர்க்கட்சிகள் அடங்கிய கூட்டணியும் திட்டமிட்டு வருகின்றன. இந்த நிலையில், பீகாரின் மதுபானி நகரில் நடந்த பொது கூட்டம் ஒன்றில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறும்போது, இந்த கூட்டணி (இந்தியா) சுயநலம் வாய்ந்தது.
லாலு யாதவ் தன்னுடைய மகனை முதல்-மந்திரியாக்க விரும்புகிறார். பிரதமராக வேண்டும் என்று நிதிஷ் குமார் விரும்புகிறார். ஆனால் இதற்கு சாத்தியமில்லை. ஏனென்றால், பிரதமர் பதவி காலியாக இல்லை.
அந்த பதவியில் பிரதமர் மோடி மீண்டும் அமர போகிறார். இந்த கூட்டணி பீகாரை திரும்பவும் அராஜக ஆட்சிக்கு கொண்டு செல்கிறது. திருப்திப்படுத்துவதன் வழியாக, அதுபோன்ற சக்திகளிடம் அவர்கள் பீகாரை ஒப்படைக்க பார்க்கிறார்கள். இதனால் பீகார் பாதுகாப்பு பெறாது.
அவர்கள் புதிய பெயருடன் புதிய கூட்டணியை உருவாக்கி உள்ளனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணி பெயரில் செயல்பட்டு ரூ.12 லட்சம் கோடி ஊழல் செய்திருக்கின்றனர். ரெயில்வே மந்திரியாக இருந்தபோது, லாலு யாதவ் கோடிக்கணக்கில் ஊழல் செய்திருக்கிறார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி பெயரை அவர்கள் மாற்றியிருக்கின்றனர். ஏனெனில் இந்த பெயரால் அவர்கள் மீண்டும் மக்கள் முன் வரமுடியாது. அதனால், புதிய கூட்டணியுடன் வந்துள்ளனர் என்று பேசியுள்ளார்.