எடை குறைப்புக்கு ரூ.1,000 கோடி... கட்காரியின் பேச்சை சவாலாக ஏற்ற எம்.பி.
|ஒரு கிலோ உடல் எடை குறைப்புக்கு ரூ.1,000 கோடி வழங்குவேன் என மத்திய மந்திரி கட்காரி கூறியதற்காக உஜ்ஜைன் எம்.பி. 15 கிலோ எடை குறைத்துள்ளார்.
உஜ்ஜைன்,
மத்திய பிரதேசத்தில் உஜ்ஜைன் தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளவர் அனில் பிரோஜியா. உடல் எடை அதிகரித்து குண்டாக காணப்பட்ட இவர் தற்போது பெருமளவில் எடையை குறைத்துள்ளார்.
இதற்கு காரணம் மத்திய மந்திரி நிதின் கட்காரி. கடந்த 4 மாதங்களுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் இவரை வைத்து கொண்டு மேடையில் கட்காரி பேசும்போது, உங்களுடைய ஒரு கிலோ உடல் எடை குறைப்புக்கு ரூ.1,000 கோடியை வளர்ச்சி திட்ட பணிகளுக்காக வழங்குவேன் என கூறியுள்ளார்.
இதனை மேடையில் வைத்து கேட்டு கொண்டிருந்த பிரோஜியா சிரித்து கொண்டார். ஆனால், கட்காரி கூறிய விசயங்களை பின்னர் சவாலாக அவர் எடுத்து கொண்டார். தொகுதி மேம்பாட்டுக்கான முயற்சியாக, 4 மாதங்களாக உடற்பயிற்சி, யோகா என பல விசயங்களை மேற்கொண்டு உள்ளார்.
இதுபற்றி பிரோஜியா கூறும்போது, ஒரு கிலோ உடல் எடை குறைப்புக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்வேன் என்ற மத்திய மந்திரி கட்காரியின் பேச்சை சவாலாக எடுத்து கொண்டேன்.
இதுவரை நான் 15 கிலோ எடை குறைத்துள்ளேன். இன்னும் உடல் எடையை குறைப்பேன். அதன்பின்னர் தொகுதி வளர்ச்சி பணிகளுக்காக வேண்டி, அவர் முன்பே உறுதியளித்திருந்த நிதியை விடுவிக்கும்படி, மத்திய மந்திரி கட்காரியிடம் வேண்டுகோள் வைப்பேன் என கூறியுள்ளார்.