ஓடும் ரெயிலில் 4 பேரை சுட்டுக்கொன்ற ரெயில்வே பாதுகாப்பு படை வீரர் பணி நீக்கம்..!
|ஓடும் ரெயிலில் உதவி சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 3 பயணிகளை சுட்டுக்கொலை செய்த ரெயில்வே பாதுகாப்பு படை வீரர் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டார்.
மும்பை,
ஜெய்ப்பூர்- மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த 31-ந்தேதி அதிகாலை மராட்டிய மாநிலம் பால்கர் அருகே வந்து கொண்டு இருந்தபோது, ரெயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ரெயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எப்.) வீரர் சேத்தன் சிங் (வயது 34), தனது உயர் அதிகாரியான உதவி சப்-இன்ஸ்பெக்டர் திகாராம் மீனாவுடன் ஏற்பட்ட தகராறில் அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தார். பின்னர் ரெயிலில் பயணம் செய்த அப்பாவி பயணிகள் 3 பேரை சுட்டுக்கொலை செய்து வெறிச்செயலில் ஈடுபட்டார்.
ரெயிலில் இருந்து இறங்கி துப்பாக்கியுடன் தப்பியோட முயன்ற அவரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர். போலீசார் சேத்தன் சிங் மீது கொலை மட்டுமில்லாமல் இரு சமூகத்தினர் இடையே மோதலை தூண்டுதல், ஆள்கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்தனர். அவர் தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் ஓடும் ரெயிலில் 4 பேரை சுட்டுக்கொன்ற ரெயில்வே பாதுகாப்பு படை வீரர் சேத்தன் சிங் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டார். ஒழுங்கு நடவடிக்கையாக இந்த பணி நீக்க உத்தரவை ரெயில்வே பாதுகாப்பு படை டிவிஷனல் பாதுகாப்பு பிரிவு சீனியர் கமிஷனர் பிறப்பித்து உள்ளார்.