சமூக வலைதளத்தில் மோதிக்கொண்ட பெண் ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள்: காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்
|கர்நாடகாவில் பெண் அதிகாரிகளுக்கு இடையேயான மோதல் விவகாரத்தில் ரோகினி சிந்துரி ஐஏஎஸ் மற்றும் ரூபா ஐபிஎஸ் ஆகிய இருவரையும் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடக அறநிலையத்துறை ஆணையராக பணியாற்றி வந்த ஐஏஎஸ் அதிகாரி ரோகினி சிந்தூரி, 3 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு நெருக்கமாக உள்ளதாகவும் இதனால் அதிகாரிகளின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐபிஎஸ் அதிகாரி ரூபா குற்றம்சாட்டி இருந்தார். மேலும் ஐஏஎஸ் அதிகாரி ரோகினி சிந்துரி, பாஜகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவரை சந்தித்த புகைப்படத்தை ரூபா ஐபிஎஸ் வெளியிட்டார்.
சக ஐஏஎஸ் அதிகாரிகள் சிலருக்கு ரோகினி சிந்துரி அந்தரங்க புகைப்படங்களை வாட்ஸ்அப் மூலம் அனுப்பியதாக ரூபா குற்றம் சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. ரூபாவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அவரை மனநோயாளி என விமர்சித்தார் ரோகினி சிந்துரி.
இந்தநிலையில், இரு அதிகாரிகளுக்கு இடையிலான மோதல் போக்கு வைரலானதை தொடர்ந்து பொதுவெளியில் குற்றச்சாட்டுகளை கூறி மோதிக்கொண்ட ரோகினி சிந்துரி ஐஏஎஸ் மற்றும் ரூபா ஐபிஎஸ் ஆகிய இருவரையும் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.