மானநஷ்ட வழக்கை ரத்து செய்ய கோரிய ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவின் மனு தள்ளுபடி
|ரோகிணி சிந்தூரி தொடர்ந்த மானநஷ்ட வழக்கை ரத்து செய்ய கோரிய ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவின் மனுவை கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பெங்களூரு:
ரோகிணி சிந்தூரி தொடர்ந்த மானநஷ்ட வழக்கை ரத்து செய்ய கோரிய ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவின் மனுவை கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பெண் அதிகாரிகள் மோதல்
கர்நாடகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்து வருபவர் ரோகிணி சிந்தூரி. கடந்த பா.ஜனதா ஆட்சியில் இவருக்கும், ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவுக்கும் இடையே மோதல் உருவானது. அப்போது சமூக வலைதளங்களில் ரோகிணி சிந்தூரிக்கு எதிராக 19 குற்றச்சாட்டுகளை ரூபா வெளியிட்டு இருந்தார். அத்துடன் ரோகிணி சிந்தூரியின் தனிப்பட்ட புகைப்படங்களையும் ரூபா வெளியிட்டு இருந்தார். இந்த விவகாரம் கர்நாடகத்தில் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக தலைமை செயலாளரிடம் ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரி, ரூபா ஆகிய 2 பேரும் தனித்தனியாக புகார் அளித்திருந்தார்கள். அவர்களிடம் தலைமை செயலாளரும் விசாரணை நடத்தி இருந்தார். அதே நேரத்தில் ரூபாவுக்கு எதிராக பெங்களூரு சிட்டிசிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் ரோகிணி சிந்தூரி மானநஷ்ட வழக்கும் தொடர்ந்திருந்தார்.
ரூபாவின் மனு தள்ளுபடி
இந்த வழக்கில் ஏற்கனவே ரூபாவுக்கு கோர்ட்டு சம்மன் அனுப்பி இருந்தது. அதன்பேரில், கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராகி ரூபா ஜாமீனும் பெற்றிருந்தார். அத்துடன் ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரி தன் மீது தொடர்ந்துள்ள மானநஷ்ட வழக்கை ரத்து செய்ய கோரி கர்நாடக ஐகோர்ட்டில் ரூபா மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டு நீதிபதி முன்னிலையில் நடைபெற்றது. அப்போது ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா தரப்பில் ஆஜரான வக்கீல் மானநஷ்ட வழக்கை ரத்து செய்ய கோரி வாதிட்டார்.
இதற்கு ரோகிணி சிந்தூரி தரப்பு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா மீது பதிவாகி உள்ள மானநஷ்ட வழக்கை ரத்து செய்ய மறுத்து விட்டார். மேலும் அவர் தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்தார். இதனால், ரோகிணி சிந்தூரி தொடர்ந்துள்ள மானநஷ்ட வழக்கை சந்திக்க வேண்டிய நிலை ரூபாவுக்கு ஏற்பட்டுள்ளது.