ரோஜ்கார் மேளா: 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பிற்கான பணி நியமன கடிதங்களை வழங்கினார் பிரதமர் மோடி
|50 ஆயிரம் பணி நியமன கடிதங்களை பெற்ற குடும்பத்தினருக்கு இந்த தருணம் தீபாவளி பண்டிகையாக இருக்கும் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
புதுடெல்லி,
நாட்டில் வேலை தேடும் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு சார்பில் ரோஜ்கார் மேளா என்ற வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22-ந்தேதியன்று பிரதமர் மோடி, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 75 ஆயிரம் பேருக்கு வேலை வழங்குவதற்கான பணி நியமன உத்தரவுகளை வழங்கினார்.
இந்த திட்டம், இளைய தலைமுறையினரிடம் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு முறையும் ஆயிரக்கணக்கானோர் மத்திய அரசில் வேலைவாய்ப்புகளை பெற்று வருகிறார்கள்.
இதன்படி, பிரதமர் மோடி மெய்நிகர் காட்சி வழியே நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் 50 ஆயிரம் பேருக்கு, மத்திய அரசில் பணியாற்றுவதற்கான பணி நியமனத்திற்கான ஆணைகள் அடங்கிய கடிதங்களை இன்று வழங்கினார்.
இதன்படி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நாடு முழுவதும் உள்ள அரசின் ரெயில்வே, அஞ்சல் துறை, உள்துறை அமைச்சகம், வருவாய், உயர் கல்வி, பள்ளி கல்வி மற்றும் இலக்கியம் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் பணிக்கு அமர்த்தப்படுவார்கள்.
இந்நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, ரோஜ்கார் மேளா திட்டத்தின் கீழ் அரசு பணிகளுக்கு லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு இதுவரை நியமன கடிதங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
இன்று, 50 ஆயிரத்திற்கும் கூடுதலான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட்டு உள்ளன. தீபாவளி பண்டிகைக்கு என ஒரு காலம் வருவதுண்டு. ஆனால், 50 ஆயிரம் பணி நியமன கடிதங்களை பெற்ற குடும்பத்தினருக்கு இந்த தருணம் தீபாவளி பண்டிகையாக இருக்கும் என அவர் பேசியுள்ளார்.
தொடர்ந்து அவர் பேசும்போது, விளையாட்டு துறையானது புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி கொண்டிருக்கிறது. தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் நம்முடைய வீரர்கள் வரலாற்று சாதனைகளை செய்து வருகின்றனர்.
விளையாட்டு துறை எப்போது வளர்ச்சி பெறுகிறதோ... அப்போது, பயிற்சியாளர்கள், மருத்துவ உதவியாளர்கள், நடுவர்கள் மற்றும் விளையாட்டு ஊட்டச்சத்து துறையில் உள்ளவர்களும் புதிய வாய்ப்புகளை பெறுவார்கள் என்று பேசியுள்ளார்.
இந்த பணி நியமனம் கடிதம் பெற்றவர்கள் கர்மயோகி பிரராம்ப் என்ற ஆன்லைன் வழியேயான பயிற்சிகளை பெற கூடிய சந்தர்ப்பம் கிடைக்க பெறுவார்கள். இதன் வழியே, 750-க்கும் கூடுதலான கற்றல் பயிற்சி முறைகள் அவர்களுக்கு கிடைக்க பெறும்.